slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

வெள்ளி, 5 நவம்பர், 2010

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்


நேற்று (நவ.3, 2010) சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக்  கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம்,தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் பா.இறையரசன் தலைமைதாங்கிய இந்நிகழ்ச்சிக்கு அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரை யாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன்   தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாடினார்.  கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் திரு நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத்தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன்வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன்பொறி.அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப்  பலரும்  தீர்மானங்களை வழி மொழிந்தனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.      தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
2.       உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார்பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணைய தளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.       இப்பேராளர்களிடம்  ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில்  இடம் பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள்  இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.       தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
5.      அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி  இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.       இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில்  எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.
7.       அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.
8.       குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர்  ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.
9.       உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.
10.     சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.
11.     சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  இதேபோல் நல்ல தமிழில் வரும்  இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றிஅரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின் விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற் சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
12.     நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப்பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
13.     இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும் பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில்  இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல்  இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழாக மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.
தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம் பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே  இணையத்தளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.
தொடக்கவுரையில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார்.  அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய திரு இலக்குவனார் திருவள்ளுவன்  தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று  நடைபெற உள்ள ஒருங்குறிக் கூட்டத்தில்  கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு  இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்துநடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.
நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போக மாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.
பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை: