நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 டிசம்பர், 2012

புதுச்சேரியில்: கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு விளக்கக் கூட்டம்

 அனைவருக்கும் வணக்கம்,

சென்னையில் வரும் டிசம்பர் 16 அன்று நடைபெற உள்ள கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டு விளக்கக்கூட்டம் புதுச்சேரியில் வரும் 5 டிசம்பர் 2012 இல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

 

வியாழன், 17 பிப்ரவரி, 2011

புதுச்சேரியில் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்



 இடம்: வணிக அவை சிறிய அரங்கம், நாள்: 20-02-2011 ஞாயிற்றுக்கிழமை,
காலம்: காலை 10.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை

தலைமை: இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,
(புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்)
நிகழ்ச்சி நிரல்: 10:00 – தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
11:00 – விளக்கப் பயிற்சிகள்
12:00 – கலந்துரையாடல்
விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்து விளக்கம்:
அ.ரவிசங்கர், நிர்வாகி (விக்கிப்பீடியா-தமிழ்)

விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது தளையற்ற உள்ளடக் கங்களைக் கொண்ட ஒரு இலவச கலைக்களஞ்சியமாகும் (encyclopedia). பலரின் கூட்டு முயற்சியால் பல மொழிகளில் கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும். இது இலாபத்தை எதிர்நோக்காத விக்கிமீடியா அறக்கட்டளையின்  திட்ட ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்பட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது. இந்திய மொழிகளில் இந்தி (67,589),  தெலுங்கு(47,386),  மராத்தி(32,598) மொழிகளுக்கு அடுத்த நிலையில் தமிழ் (28,036) கட்டுரைகள் இடம் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

இந்த விக்கிப்பீடியாவை நீங்களும் தொகுக்கலாம். தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் இதில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிபீடியா திட்டங்களை அறிமுகம் செய்து விளக்கப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் கலந்து கொண்டு பயன்பெறவும், தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பை செலுத்தவும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

கைப்பேசி: 94431 05825, மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,
வலைப்பூ:  http://www.puduvaibloggers.blogspot.com,
இணையதளம்: www.pudhuvaitamilbloggers.org

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

"தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கக்கூடாது"- தினமணி செய்தி


புதுச்சேரி, ஜன.1- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை  சேர்க்க்க்கூடாது என்று, புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடுவணிக அவை அரங்கில்  ஞாயிற்றுக்கிழமை நடந்த்து. இதில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் கலந்து கொண்டு கைபேசியில் மின் நூலை வெளியிட்டார். அதன் முதல் படியை அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது என்பதோடு, 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும்
எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது .தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும்

இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.


     உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

     தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

புதுச்சேரி தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு: நிகழ்ச்சி நிரல்

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு
எதிர்ப்பு மாநாடு
நாள் : 30.01.2011 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 9.00 முதல் 1.00 மணி வரை
இடம் : வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி.
தலைமை
திரு. இரா. சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
முன்னிலை
திரு. கோ.அ.செகநாதன் அவர்கள்,
தலைவர் உள்ளாட்சி மன்றங்களின் கூட்டமைப்பு
திரு. ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
திரு. ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டி,- தமிழ் வலைப்பதிவு திரட்டி
 
வரவேற்பு
திரு. க.அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,
கைப்பேசியில் மின் நூல்வெளியிட்டு
மாநாட்டுத் தொடக்க உரை
பேராசிரியர் திரு. ந.தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர் (ஓய்வு), தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்

மின் நூல் முதல் படி பெறுபவர்
திரு. கோ. சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு,
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT)
கருத்துரை
பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா அவர்கள்
புதுச்சேரி இயற்கைக் கழகம்
திரு. இராம.கி. அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் , (INFITT) சென்னை
பேராசிரியர் திரு. நா. இளங்கோ அவர்கள்,
தமிழ் துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி
திரு. மா. பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழி , சென்னை
திரு. கோ. திருநாவுக்கரசு அவர்கள்,
தாளாண்மை உழவர் இயக்கம்
திரு. இரா. அழகிரி அவர்கள்,
தமிழர் தேசிய இயக்கம், புதுச்சேரி
திரு. ந.மு.தமிழ்மணி, அவர்கள்,
அமைப்பாளர், செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
திரு. க. தமிழ் மல்லன் அவர்கள்,
தலைவர், தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி
திரு. தமிழ நம்பி அவர்கள்,
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
திரு. சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர், தனித்தமிழ் கழகம், புதுச்சேரி
திரு. பெ. பராங்குசம் அவர்கள்,
 தலைவர், இலக்கியப் பொழில் இலக்கியப் பாசறை, புதுச்சேரி.
திரு. தமிழ்நெஞ்சன் அவர்கள்,
புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம் புதுச்சேரி
திரு.ப. திருநாவுக்கரசு அவர்கள்,
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி
மாநாட்டு நிறைவுரை
திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்துப் பாதுகப்பியக்கம்
நன்றியுரை:
திரு. ம. இளங்கோ, அவர்கள்
அமைப்புக்குழு உறுப்பினர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20, 4வது தெரு விரிவாக்கம், அன்னை தெரேசா நகர்,
மூலக்குளம், புதுச்சேரி - 605 010.
செல்: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, வலைப்பூ: www.puduvaibloggers.blogspot.com, 
இணையம்: www.pudhuvaitamilbloggers.org 
.............
அண்மைக்காலமாக இணையம், கணினி ஆகியவற்றின் பயன்பாட்டின் காரணமாக தமிழ் மொழியும் வளர்ந்துள்ளது என்று கருதலாம். இன்று உலகம் முழுதும் எளிமையாக தமிழில் தகவல் தொடர்புகள் செய்ய முடிகிறது. இந்த வளர்ச்சிக்கு ஒருங்குகுறி நடைமுறைக்கு வந்ததே காரணமாகும்.

ஒருங்குகுறி (Unicode) என்றால் என்ன?
ஒருங்குகுறி என்பது வரியுருக்களையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக் கப்பட்ட ஒரு குறிமுறை நியமம்.கணிப்பொறியில் ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளைத் தவிர பிற மொழி எழுத்துக்களை எழுதுவதிலும் படிப்பதிலும் சிக்கல் நிறைந்து இருந்தது. எனவே, உலகில் உள்ள எல்லா மக்களும் கணினியில் எளிதில் பயன்படுத்த, உலகின் எல்லா எழுத்துமுறை களையும் உள்ளடக்கி ஒரு எழுத்துத் தரப்பாடு உருவாக்கப் பட்டது. அதற்குப் பெயர் தான் ஒருங்குறி எழுத்து முறையாகும்.

கணினி, அலைபேசி, கணினி இயங்குதளம் ஆகிய வற்றில் தமிழைப் பயன்படுத்த இந்த முறை மிகவும் அவசியம். இந்த முறையில் தமிழ் எழுத்துக்கள் கையாளப்படுவதால், தமிழ் மொழி கணினியில் தங்கு தடையின்றி செயல்பட முடியும். ஒருங்குகுறியில் தமிழ் கையாளப்படுவதால் இணையதளங்கள் தனியே எழுத்துருக் களை வைத்திருக்கத் தேவையில்லை.
முன்பெல்லாம் ஒவ்வொரு மென்பொருள் நிறுவனமும் புதுப்புது எழுத்துருக்களை உருவாக்கிச் சந்தையில் விற்பனைக்குத் தந்தன. ஒரு நிறுவன எழுத்தை நாம் படிக்க வேண்டும் என்றால் நம் கணினியிலும் அந்த எழுத்துரு இருக்க வேண்டும். அப்போதுதான் பிறர் அனுப்பும் கடிதங்களை, கோப்புகளைப் படிக்க முடியும், நாம் இன்று தமிழ் ஒருங்குகுறி எழுத்துருவைப் பயன்படுத்தி உலகின் எந்த மொழியினர் பயன்படுத்தும் கணினிக்கும் தமிழில் மடல்கள், கோப்புகளை அனுப்பினாலும் சிக்கலின்றி அனைவரும் படிக்க முடியும்.

கிரந்தம் என்பது என்ன?
கிரந்தம் ஒரு எழுத்து முறை, மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன. அற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடு உண்டாக்கவும் காரணமாகின.

ஒருங்குகுறி சேர்த்தியம் 

ஒருங்குகுறி சேர்த்தியம் என்பது உலகளவில் ஒருங்குகுறிகளை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பு எல்லா மொழிகளுக்கும் தகுந்த இடம் ஒதுக்கி அவற்றை பராமரித்து வருகிறது. இந்த அட்டவணையில் கூட்டல், கழித்தல், மாற்றம் வேண்டுமாயின் இந்த அமைப்பிடம் தான் முறையிட வேண்டும். இந்தியா இந்தக் குழுமத்தில் ஓட்டுரிமை பெற்ற உறுப்பினராக உள்ளது. முன்பு தமிழக அரசும் உறுப்பினராக இருந்தது.  இப்போது புதுப்பிக்காமல் விட்டு விட்டது.

ஒருங்குகுறியில் தமிழ்:
ஒருங்குகுறி சேர்த்தியம் ஒவ்வொரு மொழிக்குரிய எழுத்துகளுக்குத் தக்க இடங்களை ஒதுக்கி வைத்துள்ளது. தமிழ்மொழிக்கு 128 இடங்களை ஒருங்குகுறி சேர்த்தியம் அமைப்பு வழங்கியுள்ளது. சீன மொழிக்கு 5000க்கும் மேற்பட்ட இடங்களை ஒதுக்கியுள்ளது. தமிழின் 247 எழுத்துக்களையும் நாம் இந்த 128 இல் உள்ள 72  இடங்களிலேயே செயற்படுத்தி விட்டோம். தமிழ் எழுத்துக் களும், தமிழ் எண்கள், ஆண்டு, மாதம் சார்ந்த தமிழ்க் குறியீடுகளும், வழக்கில் உள்ள  கிரந்த எழுத்துக்களும் (ஸ, , , , ஸ்ரீ) இந்த 72 இல் இடம்பெற்றுள்ளன. தமிழுக்குரிய மற்ற 56 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

‘‘தமிழ் நீட்சி’’ முன்மொழிவு
காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த திரு. இரமண சர்மா என்பவர் இவ்வேளையில் ஒரு பரிந்தரை செய்துள்ளார். நிரப்பப்படாமல் உள்ள தமிழுக்குரிய 56 காலியிடங்களில் கிரந்த எழுத்துக்கள் 26ஐச் சேர்க்கும் முயற்சியே அப்பரிந்துரை. இதில் அவர் வடமொழி, செளராட்டிரம் போன்ற மொழிகளைத் தமிழ் எழுத்துக்களில் எழுத தேவநாகரி, தெலுங்கு முதலான மொழிகளைப் போலவே க1, 2 ,3, 4 என  வல்லின எழுத்துக்களின் எழுத்த மூச்சு வேறுபாடுகளைக் குறிக்கவும், ‘‘வடமொழி உயிரொலிகளுக்கும் என்று மொத்தம் 26 புதிய கிரந்த எழுத்துக்களை நுழைக்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழ் அட்டவணை யில் தமிழுக்குரிய 56 நிரப்பப்படாத இடங்கள் என்பது நமது வருங்கார பயன்பாட்டிற்கேயயாழிய வேற்று மொழியின்/எழுத்தின் ஆக்கிரமிப்புக்கு அல்ல. 

 கிரந்தத்தைத் தமிழில் கலந்தால் ஏற்படும் விளைவுகள்
பழைய மணிப்பிரவாள நடைக்கு வித்திடலாம். தெலுங்கு, மலையாளம் போன்ற புது மொழிகளுக்கு வித்திடலாம்.
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீ இ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே
தொல்காப்பியர் வடவெழுத்துக்களை நீக்கி தமிழை எழுதிடச் சொல்லும் போது , நாம் தெரிந்தே வேற்று எழுத்துக் களை நம் மொழியில் கலக்க அனுமதிப்பது தற்கொலைக்கு நிகரானது.

நாக.கணேசனின் பரிந்தரை
இரமண சர்மாவின் பரிந்துரைக்கு மாற்றாக முன்மொழியப்பட்டிருக்கிறது.  என்னவென்றால் கிரந்த எழுத்துக்களுக்கு தனி அட்டவணைஅமைத்து, அதில் தமிழுக்கே உரிய சிறப்பு ஒலிகளை தரும் எழுத்துக்களை
(, , , , , ஆகிய ஐந்தையும்) அதில் சேர்ப்பது.

மேலோட்டமாக பார்த்தால், தமிழ் எழுத்துக்களை தமிழ் மொழியைத் தாண்டி எடுத்துச் செல்லும் நாக. கணேசனின் முன்மொழிவு நன்மை பயப்பது போல் தோன்றும். அவர் எழுதுகிறார்.

‘‘இந்த ஐந்து எழுத்துக்களையும் சேர்ப்பதால், வருங்காலங்களில் தமிழர்கள் கிரந்தம் கலந்தே தமிழை எழுதுவார்கள் என்றும், மின்னஞ்சல்கள், இணையதளங் கள், வலைபூக்கள் ஆகியன கிரந்தம் கலந்தே எழுதப்படும் என்றும், இந்த ஐந்து எழுத்துக்களை சேர்க்காவிடில் தமிழ் மொழியை கிரந்தத்தைக் கொண்டு எழுத இயலாது’’ என்றும் கூறுவதை உணர முடிகிறது.

சுவாமிநாத தேசிகர் போன்றோர் தமிழ் மொழிக்கு ஐந்து எழுத்துக்கள் ( எ,,,,ன) மட்டுமே உண்டு என்று பழித்தவர்கள், இன்று அந்த ஐந்து எழுத்தையும் கொண்டு கிரந்த அட்டவணையில் சேர்த்தால் வருங்காலச் சமூகம் தமிழ் மொழியை எழுத்தில்லா மொழி எனப் பழிக்கவும் கூடும். நமது கோரிக்கை, தமிழோடு கிரந்தத்தையும் கலக்க வேண்டாம், கிரந்தத்தோடு தமிழையும் கலக்க வேண்டாம்.

சிறீ இரமண சர்மாவின் முன்மொழிவு தற் போதைக்கு நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இருப்பினும் நாம் தொடர்ந்து அதனைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நாக. கணேசனின் முன்மொழிவினால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிற மொழிகளின் எழுத்துக்கள் தமிழில் கலந்தாலும், பிறமொழி  ஒலி தமிழில் கலந்தாலும், தமிழின் தனித் தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியான தமிழைப் பாதுகாப்பது  தமிழர்களின்  கடமையாகும்.

கைப்பேசியில் மின்னூல்
 கிரந்த திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் கைப்பேசியில் மென்னூல்கள்  வெளியிடப்பட உள்ளது. தற்போது திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசி ஆகியவை வெளியிடப்பட உள்ளன. அவை வெளியிடப்பட்டவுடன் www.pyw3.com என்ற தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருட்களை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக்குழு உறுப்பினரும், திரட்டி வலைப்பதிவு திரட்டியின் நிர்வாகியுமான ஏ.வெங்கடேசு இவற்றை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள :agevenkat@gmail.com

திங்கள், 5 அக்டோபர், 2009

புதுச்சேரியில் மீண்டும் வலைப்பதிவர் பயிலரங்கு

புதுச்சேரியில் மீண்டும் வலைப்பதிவர் பயிலரங்கு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று 04-10-2009 காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, சாகித்திய அகாதமி உறுப்பினர் மகரந்தன், க.அருணபாரதி, திரட்டி வெங்கடேஷ், கு.இராம்மூர்த்தி ஓவியர் இராசராசன், சீத்தா.பிரபாகரன், ஆனந்தக்குமார், வீர.மோகன்.
தமிழநம்பி. இரா.செயப்பிரகாசு, இரா.முருகப்பன், ஏ.சீனுவாசன் (கடலூர்), முருகதாசு, ந.இரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரும் ஆண்டு சனவரி 10, 2010 ஞாயிறன்று நடத்துவது என திட்ட மிடப்பட்டுள்ளது. வழக்கமாக வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை என்று அழைக்கப்பட்ட இப்பயிலரங்கு BLOGGERS WORKSHOP என்ற வார்த்தையை நேரடியாக ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இது தவறானதாகும் என்று சென்றமுறை புதுச்சேரி பயிலரங்கில் கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ சுட்டிக்காட்டி இருந்தார். எனவே அதன் அடிப்படையில் பயிற்சிப்பட்டறை என்று குறிப்பிடாமல் இனிமேல் “பயிலரங்கு” என்று அழைப்பது என முடிவு செய்துள்ளோம்.

இந்த கூட்டத்தில் சென்ற முறை வழங்கியது போல ஒரு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு இலவசமாக கொடுப்பது, மலர் வெளியிடுவது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலர்க் குழு உறுப்பினர்கள்: பேராசிரியர் நா.இளங்கோ, மகரந்தன், இரா.சுகுமாரன்

குறுந்தகடு வெளியிடல்: க.அருணபாரதி, திரட்டி வெங்கடேஷ் ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பதிவர்கள் தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

புதுச்சேரியில்தமிழ் தயார் திட்டம் செயல்படுத்த - 28-09-2008 ஞாயிறு அன்று ஆலோசனைக் கூட்டம்

அனைவருக்கும் வணக்கம், புதுச்சேரியில் தமிழ் தயார் திட்டம் ஏற்கனவே தொடங்குவதாக திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இதுவரை அதற்கான பணி எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே அத்திட்டத்தை நடைமுறை செய்வது குறித்து விவாதிக்கலாம் என கருதியுள்ளோம். வரும் 28-09-2008 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு புதுச்சேரி 100 அடி சாலை நடேச நகரில் (இந்திரா காந்தி சிலை அருகில் உள்ளது) இதற்கான ஆலோசனக்கூட்டம் நடைபெற உள்ளது. இது ஒரு பதிவர் சந்திப்பாகவும் நடைபெறும், இதில் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன். கலந்து கொள்ள rajasugumaran@gmail.com அல்லது 94431 05825 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் தயார் திட்டம் என்பது " தற்போது கணினியில் தமிழ் பயன்படுத்துவதற்கான வசதிகள் அதிகமாக இருந்தாலும் அதன் பயன்பாடு பெரிய அளவில் இல்லை என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இணையம் பயன்படுத்த இணைய மையங்களுக்கு வருபவர்களுக்கு உடனடியாக இந்த வசதிகள் சென்று சேர இணைய மையங்களில் தமிழ் வசதிகளை நிறுவி அந்த மையத்தில் உள்ளவர்களுக்கு இது தொடர்பான தகவல்களை அளித்து தமிழ் மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு ஒன்றும் இலவசமாக அளித்து தமிழை இணைய மையங்களில் பயன்படுத்த தயார் செய்வதையே " தமிழ் தயார்" திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கோவையில் செயல்படுத்தப்பட்டுள்ளதால் இத்திட்டத்தை ஏற்கனவே கோவையில் செயல்படுத்திய "ஓசை செல்லா" இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். http://osaichella.blogspot.com/2007/12/1000.html இது குறித்து ஓசை செல்லா ஏற்கனவே இட்ட பதிவின் காணவும். அன்புடன் இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

செவ்வாய், 17 ஜூன், 2008

புதுச்சேரி வலைப்பதிவர் கருத்தரங்க புகைப்படங்கள்

திரு. இரா.சுகுமாரன் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர்
பேசியதிலிருந்து சில..........

தமிழ் வளர்ந்து வருகிறது, தமிழ் உலக அரங்கில் தவிர்க்க இயலாமல் தனது இடத்தை தக்க வைக்க போராடிவருகிறது. அதற்கு உதாரணமாக இரண்டை குறிப்பிடலாம். ஒன்று உலகில் எத்தனையோ மொழிகள் இருக்க தமிழில் இணைய முகவரியை கொடுப்பதற்கான சோதனை மொழிகளுள் பதினைந்தில் (11+4 )ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. (http://உதாரணம்.பரிட்சை/) என்ற சொல்லைக் கொண்டு இணைய முகவரியை தமிழில் கொடுத்து இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுநாள் வரை ஆங்கிலத்திலேயே இணைய முகவரிகளை கொடுத்தோம். இனி அது மாறும் நிலை உருவாகியுள்ளது. இது இணையத்தில் தமிழின் வளர்ச்சியை குறிக்கிறது.

இரண்டாவதாக, நாசா விண்வெளி நிலையம் வேற்று கிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா? என சோதிக்கும் முயற்சியில் 15 மொழிகளை பல்வேறு குறீயீடாக மாற்றி சோதித்து வேற்று கிரகத்தில் சூரிய குடும்பத்தில் உள்ள பூமி போல ஏதேனும் வேறு எங்கேனும் மனிதர்கள் அல்லது மனிதர்கள் போல முன்னேறிய உயிர்கள் இருக்கிறதா என சோதித்து வருகிறார்கள். அதில் தமிழ் மொழியையும் ஒரு குறியீட்டு மொழியாக பயன்படுத்துவதாக நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார், இதுவெல்லாம் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை மறுக்க முடியாது.
இன்று மின்னஞ்சல் ஜீமெயில் தமிழில் வந்துள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்டிருந்தாலும் இதில் பல சொற்களை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தினர் மொழி பெயர்த்துள்ளனர். இதனால் ஆங்கிலமே தெரியாதவர்கள் கூட தமிழில் மின்னஞ்சல் அனுப்ப இயலும் என்ற நிலை இன்று உள்ளது.

நண்பர் வெங்கடேசு கூட வேறு ஒரு பிரபலமான நிறுவனத்தின் இணைய தளத்தை முழுவதுமாக மொழி பெயர்த்ததாக என்னிடம் தெரிவித்தார்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் திரு கோ.சுகுமாரன் அவர்களது தொடக்கவுரையிலிருந்து ....

இணையத்தில் தமிழின் வளர்ச்சியை பறைசாற்று ம் வலைப்பூக்கள் தான் வேகமாக ஊடகமாக செயல்படுகின்றன. நாகைப்பட்டினத்தில் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக திரட்டப்பட்ட உயிர் காக்கும் உணவுப் பொருட்களை படகுகளில் சென்று கொடுக்கும் போராட்டம் நடத்திய போது அதனை நேரடியாக நொடிக்கு நொடி இணையதளத்தில் பதிவிட்டோம். இது போன்ற வேகமான மக்கள் ஊடகத்தை நாம் இன்னும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.

திரு க.அருணபாரதி அவர்கள் பேசியதிலிருந்து.....

இணையத்தில் மட்டும் தமிழ் வளர்ந்தால் போதாது. கணினியில் நிறுவப்படும் மென்பொருட்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. அவற்றை தமிழாக்கம் செய்திடவும், புதிய தமிழ் மென்பொருட்களை உருவாக்கவும் இளைஞர்கள் முன்வர வேண்டும். அதனை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் செயல்திட்டம் வகுத்து செயல்படுத்தும் என நம்புகிறேன். தமிழ் மென்பொருட்கள் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் வராமல் அவை மக்கள் சார்ந்த இயக்கங்கள், அமைப்புகளின் கீழ் மக்களுக்கான பயன்பாட்டிற்கு வர வேண்டும்.

சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் மகரந்தன் அவர்கள் வாழ்த்துரையில் பேசியதிலிருந்து....

புலம் பெயர்ந்த தமிழர்களின் வலைப்பூக்களில் மொழியின் நடை சிறப்பாக உள்ளது. வலைப்பூக்கள் தமிழர்களை இணைப்பதோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியிலும் பங்கு வகிக்கின்றன. அதோடு அல்லாமல் வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகமாக வளர்ந்து வந்துள்ளது. இந்த வலைப்பதிவுகள் எதிர்காலத்தில் பத்திரிகைகளுக்கு ஒரு சவாலாக அமைந்து விடும் நிலை வளர்ந்து வருகிறது. இப்போதே வலைப்பூக்கள் பத்திரிகைகளுக்கு முன்பாக செய்தியை அளித்து வருகின்றன. இதன் போக்கு காலப்போக்கில் வலைஉலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.

விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு தமிழநம்பி அவர்கள் வாழ்த்துரையில் பேசியதிலிருந்து....
கடந்த மாதம் திணமணியில் ஒரு கட்டுரையில் தனித்தமிழை பற்றி அவதூறாக ஒருவர் எழுதியிருந்தார். அதனை மறுத்து தினமணிக்கு கடிதம் எழுதியும் அதனை அவர்கள் பிரசுரிக்கவில்லை.. அதே கட்டுரை திண்ணை இணைய இதழில் வெளிவந்தபோது அதற்கு நான் எழுதிய மறுப்பு அடுத்த நாளே வந்தது. விவாதங்களும் அதன் விளைவாக நடந்தன. இது போன்ற எளிதில் ஒரு கருத்திற்கு எதிர்வினையாற்றும் செயல்திறனை வலைப்பூக்கள் கொண்டிருக்கின்றன என்றார். வலைப்பூக்கள் சிலவற்றில் வெளிவரும் வேண்டத்தகாத கருத்துக்களை நீக்க தமிழ்மணம் குழுவினர் முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் நா.இளங்கோ வாழ்த்துரையில் பேசியதிலிருந்து....

வலைப்பூக்களில் நல்ல கருத்துக்கள் வெளிவருகின்ற போது தேவைப்படாத சில கருத்துக்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கும். இது தவிர்க்க முடியாதது. தமிழில் கெட்ட வார்த்தைகள் என சொல்வதே ஒரு ஆதிக்க மனப்பான்மை தான். ஆகவே வலைப்பூக்களில் தணிக்கை செய்வது முடியாத காரியமாகத்தான உள்ளது என்று யதார்த்த நிலையை எடுத்துரைத்தார். இணையதளங்களில் தமிழில் தேடுவதற்கு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழ்மணம் திரட்டியின் நிறுவனர் திரு காசி ஆறுமுகம் பேசியதிலிருந்து...

தான் பேசத் தொடங்கும் போதே நான் மேடைகளில் அதிகம் பேசியதில்லை எனவே, நான் பேசுவதில் குறை இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தனது உரையை தொடங்கினார். சொல்லியதிலிருந்து பார்த்தால் சரியாக பேசமாட்டாரோ என எண்ணும்படியாக இருந்தது.

ஆனால் மிகமிக நிதானமாக பல்வேறு கருத்துக்களை மிக அருமையாக முன்னெடுத்து வைத்திருந்தார். தமிழின் நிலை, புதிய யுனிகோடு வருவதில் உள்ள சிக்கல்கள் பற்றியெல்லாம் மிக மிகத் தெளிவாக கருத்துக்களை முன்வைத்தார்.

திரட்டிகள் பற்றியும் அது செய்யும் அதன் உண்மையான வேலையாக பத்திரிகைச் செய்திதாள்களுக்கு எப்படி அதன் விளம்பர தட்டி உள்ளதோ அது போலத்தான் எனவே அதனிடம் அதற்கு மேல் எதிர்பார்க்க கூடாது என தனது கருத்தை முன்வைத்திருந்தார். வலைப்பதிவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் தமிழ்மணம் பற்றியும் தொழில் நுட்பரீதியான கேள்விகள் சிலவற்றுக்கும் பதில் அளித்தார்.

தமிழ்மணம் திரட்டியை தொழில்நுட்ப ரீதியாக நிர்வகித்து வரும் திரு தமிழ் சசி அவர்கள் பேசியதிலிருந்து...
வலைப்பூக்களை தமிழ் மணத்தில் பதிப்பிக்கும் பொது அவற்றில் உள்ள கருத்துக்கள் முழுவதையும் நாம் படிப்பதில்லை. அவ்வாறு படித்து அவற்றை ஆய்வு செய்து தணிக்கை செய்து தான் வெளியிட வேண்டும் என்றால் அது கடினமான காரியம். ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் பலரும் எழுதுவதால் எங்களால் நாடுகளின் நேரங்களை பொறுத்துதான் அதனை செயல்படுத்த முடியும். அது கடினமான பணி. பிறர் மனதை புண்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டிருக்கும் பதிவுகளை எவரேனும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினால் அதனை செய்வோம். அதற்கென தனியே தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்திலேயே ஒரு பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்தார். வலைப்பூக்கள் நல்ல கருத்துக்களோடு நட்பையும் சேர்த்து வளர்க்கிறது. இதனை நாம் நல்ல முறையில் உபயோகித்துக் கொண்டு தமிழர்களின் ஒற்றுமையை வளர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டியன் அவர்கள் பேசியதிலிருந்து...
தற்பொழுதுள்ள ஊடகங்கள் ஆதிக்க சக்திகளிடம் மேட்டுக்குடித் தன்மையடனும் தான் செயல்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். பெரும் ஊடகங்கள் இவ்வாறு இருப்பதால் மக்களின் உண்மையான கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுதில்லை. இந்நிலையை வலைப்பூக்கள் உடைத்திருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். புதிய இளம் எழுத்தாளர்கள் பலரையும் வலைப்பூவுலகம் இன்று தமிழுக்கு வழங்கியிருக்கிறது. இக்கருத்தரங்கு மூலம் பல புதிய நண்பர்களையும் இதே வலைப்பூவுலகம் தான் நமக்கு வழங்கியிருக்கிறது. நாம் தெளிவான பாதையில் ஊடகங்களின் அரசியலில் சிக்குண்டு சிதையாமல் நமது ஊடகமாக வலைப்பூக்களை மாற்ற வேண்டும். வலைப்பூக்களில் ஒரு பிரச்சனை குறித்து என்ன விவாதிக்கிறார்கள் என்பதை பலரும் ஆராய்ந்திடும் காலம் வர வேண்டும். இதன் மூலம் நாம் புதிய வரலாற்றை சமூகத்தை படைக்க வேண்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

"இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் " கருத்தரங்கம் பற்றி..

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக "இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்" குறித்த கருத்தரங்கம் நேற்று(16-6-08) மாலை புதுச்சேரியில் இனிதே நடந்தேறியது. லீ ஹெரிடேஜ் உணவகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ஏராளமான தமிழ் கணினி ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்தரங்கிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு இரா.சுகுமாரன் தலைமை தாங்கி பேசினார். வலைப்பதிவுகள் பற்றியும் இணையத்தில் தமிழின் பயன்பாடு பற்றியும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். 'திரட்டி' வலைப்பதிவுகளைத் திரட்டும் இணையதளத்தை நடத்திவரும் தூரிகா வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கில் சிறப்புரையாற்ற அமெரிக்காவிலிருந்து "தமிழ்மணம்" திரட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முனைவர் சொ.சங்கரபாண்டி, தமிழ்மணத்தை தொழில்நுட்ப ரீதியாக நிர்வகித்து வரம் திரு தமிழ் சசி ஆகியோரும், கோவையிலிருந்து தமிழ்மணத்தின் நிறுவனர் திரு காசி ஆறுமுகம் அவர்களும் வந்திருந்தனர்.
புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளரும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைக்குழு உறுப்பினருமான திரு கோ.சுகுமாரன் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது பேச்சில் பல நாடுகளிலிருந்தும் செய்திகளை எளிதிலும் வேகமாகவும் பெற வலைப்பூக்களே சிறந்த ஊடகமாக செயல்படுகின்றன எனக் கூறினார். சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் மகரந்தன் அவர்கள் கருத்தரங்கை வாழ்த்திப் பேசினார். அவர் பேசுகையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழிநடை சிறப்பாக உள்ளதாகவும் வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாகவும் செயல்படுகின்றன எனக் கூறிப்பிட்டார். பின்னர், விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு தமிழநம்பி அவர்கள் பேசுகையில் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் வலைப்பூக்கள் உதவுவதாக குறிப்பிட்டு பேசினார். காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் திரு நா.இளங்கோ பேசுகையில் தமிழில் தேடுவதற்கு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். கருத்தரங்கிற்கு முன்னிலை வகித்த திரு க.அருணபாரதி இணையத்தில் தமிழ் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது என்றும் தமிழ் மென்பொருட்களின் வளர்ச்சியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறி்ப்பிட்டார். பின்னர் பேசிய திரு இரா.சுகுமாரன் கடந்த 2007 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நடத்திய தமிழ்கணினி - வலைப்பதிவர் பயிற்சி பட்டறையின் போது வெளியிடப்பட்ட குறுந்தகட்டில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக க.அருணபாரதி உருவாக்கிய சில மென்பொருட்கள் வெளியிடப்பட்டன எனவும் அவை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இணையதளத்தில் விரைவில் யாரும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தார். (குறிப்பு: ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள மென் பொருட்கள் முழுமையாக இணைக்கப்படாததால் பணியாற்ற வில்லை. குறுந்தகடில் வெளியிடப்பட்டுள்ளது பணியாற்றும் நிலையில் உள்ளது, விரைவில் பணியாற்றும் நிலையிலான முழு மென்பொருட்கள் இணைக்கப்படும் மேலும் டாட் நெட் தரவிறக்கம் செய்து உபயோகிக்க வேண்டும் என்ற குறிப்பும் தளத்தில் இல்லை. எனவே விரைவில் முழுவிரங்களுடன் வெளியிடப்படும். தற்போது உள்ளதை இரண்டொரு நாட்களுக்கு யாரும் தரவிறக்கம் செய்ய வேண்டாம். - இரா. சுகுமாரன்)
கருத்தரங்கின் தொடக்கமாக "தமிழ்மணம்" திரட்டியின் நிறுவனர் திரு காசி ஆறுமுகம் திரட்டிகளின் வேலையை பற்றிக் குறிப்பிட்டு பேசினார். நாளிதழ்களின் போஸ்டர் செய்யும் வேலையைத் தான் திரட்டிகள் செய்கின்றன என எளிமையாக திரட்டிகளின் பணியை பற்றி அவர் சொன்னார். தமிழ் இணைய உலகில் இணையதளங்களின் வளர்ச்சியை விட 95 % விழுக்காடு தமிழ் வலைப்பூக்களால் தான் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். வணிக முக்கியத்துவம் இல்லாதிருப்பதும், அரசியல் ஆதிக்கத்திற்கு உட்படாமல் நம் படைப்புகளை நாமே வெளியிடுவதும் தான் வலைப்பூக்களின் சிறப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார். அதன் பின்னர் திரு தமிழ் சசி அவர்கள் உரையாற்றினார். தமிழ் மணம் திரட்டியின் தொழில்நுட்பரீதியான சவால்களை பற்றியும் வலைப்பூக்கள் எவ்வாறு உலகத் தமிழர்களின் ஒற்றுமையை பேணுகின்றன என்பது குறித்தும் அவா உரையாற்றினார். நமக்கான வாசகர்களை நாமே உருவாக்கும் வசதியை இவை செய்து தருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக உரையாற்றிய முனைவர் திரு சொ.சங்கரபாண்டி அவர்கள் தற்பொழுதிருக்கும் ஊடகங்கள் மக்களின் கருத்துக்களை புறக்கணிக்கின்றன என்றும் அதனை உடைத்து வலைப்பூக்களை நமக்கான ஊடகமாக மாற்றி புதிய வரலாறு படைக்க வேண்டும் என்றும் பேசினார். இறுதியாக திரு ம.இளங்கோ நன்றி நவின்றார். வல்லுனர்களின் கருத்து மழை நிறைவடைந்ததும் வானத்திலிருந்து நிஜ மழை தொடங்கியது. மழைச்சாரலோடு கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
தோழமையுடன்,
க.அருணபாரதி

சனி, 14 ஜூன், 2008

" இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் " புதுச்சேரியில் கருத்தரங்கு

இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வரும் திங்கள் அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது, இடம் “ஓட்டல் லெ ஹெரிட்டேஜ் பாண்டிச்சேரி“ 128 கந்தப்பா தெரு, அண்ணாத்திடல் பின்புறம் புதுச்சேரியில் நடக்க உள்ளது.
இதில் தமிழ்மணம் நிர்வாகி திரு சொ. சங்கரபாண்டி அவர்கள் இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் பற்றியும்,
தமிழ்மணத்தின் நிறுவனரான திரு காசி. ஆறுமுகம் தமிழ்மணம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பிலும்
திரு தமிழ் சசி உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் வலைப்பதிவுகள்
என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகின்றனர். அனைவரும் வருக,
அழைப்பு இணைத்துள்ளேன்.
வருக வருக அனைவரும் வருக.