வெள்ளி, 6 நவம்பர், 2020

பின்ன சின்ன ஒருங்குறிப்பணி இனிதே நிறைவேறியது

  திரு. நாக. இளங்கோவன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து ................

பின்ன சின்ன ஒருங்குறிப்பணி இனிதே நிறைவேறியது. ஒருங்குறியில் ஏறவிருந்த 55 குறியீடுகளில், குறைகள் உள்ளன என்று தெரிவித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல,தமிழக அரசு தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி, ஏறத்தாழ ஓராண்டு ஆய்வுக்குப்பின், 33 குறியீடுகளில் திருத்தம் செய்து, ஒருங்குறிச்சேர்த்தியத்திற்கு பரிந்துரைத்தது. தற்போது, ஒருங்குறிச்சேர்த்தியம், யுனிக்கோடு 12.0 வேற்றத்தில் (version) 51 வரலாற்று தமிழ்க்குறியீடுகளை சேர்த்துள்ளது. பார்க்க: http://www.unicode.org/charts/PDF/U11FC0.pdf.

2014ல், ஒருங்குறியில் 55 வரலாற்றுக்குறியீடுகளை சேர்க்கும் ஒரு முன்னீட்டை ஆய்வு செய்து, திருத்தங்கள் தேவை என்று அடியேன் எழுதிய கட்டுரை/மடலில் தொடங்கிய இப்பணி, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன் (இரவா கபிலன்), திரு.இரா.சுகுமாரன், திரு.ஆல்பர்ட்டு பெர்னாண்டோ ஆகியோருடன் இணைந்து எங்களின் கடின உழைப்பில் அரசுக்கு முன்வைக்கப்பட்டது.
 
பல தொல்லியல் அறிஞர்களோடு பணிசெய்த அந்த நாள்கள் இனிமையானவை.
தொல்லியல் அறிஞர்களின் ஆய்வும் அறிவும் தொழப்பட வேண்டிய ஒன்று. (தமிழ்த்துறையும் தொல்லியல் துறையும் ஒற்றுமையாக பணியாற்றினால் தமிழுக்கு எத்தனையோ சாதனைகளை செய்ய முடியும்.)
 
இதற்காக உழைத்த தொல்லியல் துறையறிஞர்கள்(கீழே பட்டியல் காண்க), இதற்கு முழுமையான வழிகாட்டலையும் ஆதரவையும் நல்கிய அன்றைய தமிழிணைய கல்விக்கழகத்தின் இயக்குநரும் நிதித்துறைச்செயலருமான திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப, தகவல் நுட்பத்துறையின் செயலர் திரு.டி.கே.இராமச்சந்திரன் இ.ஆ.ப, அறிஞர் குழுவின் தலைவராக இருந்து இதற்கான கூட்டங்கள் அனைத்தையும் வழிநடத்திய பேராசிரியர் பொன்னவைக்கோ, இந்த முன்னீட்டை (proposal) சீர்செய்து அனுப்ப, பொறுப்பையும் ஒருங்கிணைப்பையும் எடுத்துக்கொண்ட சென்னைப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத்தலைவர் பாலாசி ஆகிய அனைவருடனும் பணியாற்றிய காலம் மிக அறிவார்ந்தது, இனிமையானது. 
 
த.இ.க சார்பாக முனைவர் சேம்சு அவர்கள் அருந்துணையாயிருந்தார். தமிழிணைய கல்விக்கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சிறந்த பணிகளில் இதுவும் ஒன்று என்று சொல்வது மிகவும் பொருந்தும். மென்மேலும் அவர்கள் ஒருங்கிணைத்து செய்துவரும் பணிகள் சிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 
 
திரு.இரமணசர்மா முதலில் வைத்த முன்னீடு (proposal) அண்மைக்கால அதாவது 18,19,20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சிலர் எழுதியிருந்த நூல்களில் இருந்த சான்றுகளை அடிப்படையாகக்கொண்டது. ஆங்கிலேயர்கள் கல்வெட்டுகளை, ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்து எழுதிய நூல்கள் அல்ல அவை. அதனால்தான் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தன. திருத்தங்கள் தேவைப்பட்டன. இதை அறிஞர் மன்றங்களில் எடுத்து வைத்து, அரசிடமும் எடுத்து வைத்தபின்னர், தமிழக அரசின் அறிஞர்குழு பொ.பி 8-9 ஆம் நூற்றாண்டில் இருந்து கல்வெட்டுகளையும் சுவடிகளையும் ஆய்வு செய்து திருத்தங்களை தந்தது. அதன் அடிப்படைகளையும் காரணங்களையும் சரியான முறையில் ஏற்றுக்கொண்டு திரு.இரமணசர்மா இறுதி முன்னீட்டை செய்து வரலாற்றின் தமிழ்க்குறியீடுகள் நல்ல முறையில் ஒருங்குறியில் சேர துணையாயிருந்தார்.
 
தமிழக அறிஞர் குழுவில் (Subject Experts Panel) கீழ்க்கண்ட அறிஞர்கள்/வல்லுநர்கள் இருந்தனர். இவர்களின் அரும்பணியில் குறியீடுகள் தெள்ளியதாகி திருத்தப்பரிந்துரை உருவாகியது. அந்த ஆவணத்தை அறிஞர் குழுவின் சார்பாக எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பார்க்க : https://www.unicode.org/.../16062-tamil-frac-sym-fdbk.pdf
அவ்வாவணத்தின் 68ஆம் பக்கத்தில் இதில் பங்குபெற்ற அறிஞர்/வல்லுநரின் பெயர்களைக்காணலாம்.
 
1) முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ
2) முனைவர் பி.டி.பாலாசி
3) முனைவர் சு.இராசவேலு
4) முனைவர் நடனகாசிநாதன்
5) நாக.இளங்கோவன் (அடியேன்)
6) முனைவர் ஆ.பதுமாவதி
7) முனைவர் இராசகோபால்
8) முனைவர் இராம.கி
9) முனைவர் விசய வேணுகோபால்
10) முனைவர் இர.வாசுதேவன் (இரவா கபிலன்)
11) முனைவர் சாந்தலிங்கம்
12) முனைவர் கலா சிரீதர்
13) முனைவர் தமிழப்பன்
14) முனைவர் சிவப்பிரகாசம்
15) முனைவர் குழந்தைவேல்
16) முனைவர் மார்க்சிய காந்தி
17) முனைவர் சேம்சு
18) முனைவர் வெங்கடாசலம்
19) முனைவர் வெங்கடேசன்
 
முனைவர் சு.இராசவேலு, முனைவர் காந்திராசன், முனைவர் வெங்கடேசன் ஆகியோரொடு இணைந்து அடியேனும் மைசூரில் நடுவணரசின் தொல்லியல் நிறுவனத்தில் (ASI) மூன்று நாள்கள் கல்வெட்டுகளில் பின்ன சின்ன வரலாற்றுக்குறியீடுகளுக்கான சான்றுகளை திரட்டினோம். அது எனக்கு மறக்க முடியாத இனிமையான அறிவார்ந்த கல்வி நாள்கள் என்றால் மிகையல்ல.
அதொடு, சரசுவதி மகாலில், த.இ.கவிற்காக தமிழ்க்கணிமை சார்புடைய ஓர் ஆய்விற்கு அடியேனை திரு.உதயச்சந்திரன் பணித்திருந்தார். அங்கு கிடைத்த ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுநூல்கள் ஆவணம் எழுதுவதற்கு மிகவும் துணையாயிருந்தன.
 
முனைவர் இராம.கி முனைவர் இராசவேலு ஆகியோருடன் ஆவணம் ஆக்கும்போது படித்த கல்வெட்டாவணங்கள் பெரிய படிப்பினை. முனைவர் இராம.கியின் நூலகத்தில் உள்ள அத்தனை கல்வெட்டு நூல்களிலும் சான்றுகள் தேடியது எனக்கு அரிய துய்ப்பறிவு.
 
ஒருங்குறிச்சேர்த்தியம் வெளியிட்டிருக்கும் இந்தக்குறியீடுகள் தமிழ் எழுதிகளில் (Tamil Editors) வெளிவர இ-கலப்பை, என்.எச்.எம் உள்ளிட்ட எழுதி ஆக்குநர் விரைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும்.
 
அனைவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

தமிழ்க்காப்புக் கூட்டம்

நேற்று (நவ.3) சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக்  கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம்,தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் பா.இறையரசன் தலைமைதாங்கிய இந்நிகழ்ச்சிக்கு அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரை யாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன்   தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாடினார்.  கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரை யாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் திரு நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத்தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன்,  வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன்,  பொறி.அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப்  பலரும்  தீர்மானங்களை வழி மொழிந்தனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.          தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

2.          உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார்,  பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணைய தளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.          இப்பேராளர்களிடம்  ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில்  இடம் பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள்  இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.          தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.

5.          அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி  இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6.          இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில்  எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.

7.          அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.

8.          குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர்  ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.

9.          உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.

10.         சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.

11.         சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  இதேபோல் நல்ல தமிழில் வரும்  இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றிஅரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின் விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற் சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.

12.         நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப்பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

13.         இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும் பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில்  இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல்  இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழாக மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.
தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம் பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே  இணையத்தளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.

தொடக்கவுரையில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார்.  அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய திரு இலக்குவனார் திருவள்ளுவன்  தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று  நடைபெற உள்ள ஒருங்குறிக் கூட்டத்தில்  கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு  இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்துநடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போக மாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம்வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.
 
பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.

சனி, 7 பிப்ரவரி, 2015

ஆண்ட்ராய்டு செயலி வெளியீட்டு விழா படம்

 


ஆண்ட்ராய்டு செயலி வெளியீட்டு விழா

பேராசிரியர் நா.இளங்கோ அவர்களின் மனிதத் தின்னிகள் கவிதைத் தொகுப்பு மற்றும் பொருநாற்றுப்படை மூலமும் உரையும் ஆண்ட்ராய்டு செயலி வெளியீட்டு விழா 07-02-2015 மாலை 6.00 மணிக்கு புதுச்சேரி 119, செகா கலைக்கூடத்தில் நடைபெறுகிறது. அனைவரும் வருக



திங்கள், 18 பிப்ரவரி, 2013

தமிழ்க் கணினி வளர்ச்சி விழிப்புணர்வு முகாம் தினமலர் செய்தி

பிப்ரவரி 18,2013,00:00  IST
புதுச்சேரி:"புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்' என அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் முதலியார்பேட்டையில் இந்திய கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலர் முருகையன் தலைமை தாங்கினார். வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் நோக்கவுரையாற்றினார்.


சபாநாயகர் சபாபதி துவக்கிவைத்து பேசுகையில், " தமிழ் மொழியில் எண்ணின் எழுத்துருக்கள் கடந்த காலங்களில் வகுப்புகளில் சொல்லித் தரப்பட்டது. ரோமன் எழுத்துகள் புகுந்த பிறகு நமது எண்களின் எழுத்துருக்கள் முற்றிலும் மறைந்து விட்டன. தற்போது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தமிழின் எண் எழுத்துருக்களை பயன்படுத்தினால் நடை முறையில் வாழும்' என்றார்.

அமைச்சர் தியாகராஜன் பேசும் போது "மாநிலத்தில் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கான பணிகளை அரசு முன்னெடுக்கும்' என்றார். 

இந்திய கம்யூ.,மாநில செயலர் விசுவநாதன், தேசியக் குழு உறுப்பினர் நாரா கலைநாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் சுகுமாறன் வாழ்த்திப் பேசினர்.


சிறப்பு அமர்வுகளில் தமிழில் இயங்குதளங்கள், தட்டச்சு மென்பொருள் நிறுவல், தமிழ் எழுத்துகளின் குறியீட்டு முறைகள், தமிழில் மின்னஞ்சல், வலைப்பதிவு தொடக்கம், தமிழில் மின் நூல், திரட்டி பயன்பாடுகள் குறித்து, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், மதகடிப்பட்டு காமராஜர் கலை அறிவியல் கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். பங்கேற்ற மாணவர்களுக்கு பேராசிரியர் பசுபதி சான்றிதழ் வழங்கினார்.

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் இளங்கோ, பாரதியார் பல்கலைக் கூட உதவி பேராசிரியர் ராஜராஜன், கலை இலக்கிய பெருமன்றம் எல்லை சிவக்குமார், துணைத் தலைவர் பொறியாளர் தேவராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கணிப்பொறியில் தமிழ் பயன்பாடு விழிப்புணர்வு முகாம் தினமணி செய்தி

தினமணி செய்தி இணைப்பு

First Published : 18 February 2013 12:58 AM IST
புதுச்சேரியில் கணிப்பொறியில் தமிழ் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் வீர.முருகையன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் தலைவர் வ.சபாபதி முகாமை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா.சுகுமாரன் விளக்கினார்.

 முகாமில் தமிழில் இயங்குதளங்கள், தட்டச்சு மென்பொருள் நிறுவல் மற்றும் பயன்பாடு, கைப்பேசியில் தமிழ், தமிழில் இணைய உலாவிகள், தமிழ் எழுத்துக்களின் குறியீட்டு முறைகள், தமிழில் மின்னஞ்சல், அரட்டை, வலைப்பதிவுகளை தொடங்குதல், திரட்டிகளின் பயன்பாடு, சமூக வலைத்தளங்கள், தமிழில் மின்நூல் உருவாக்குதல், கட்டற்ற மென்பொருள்கள், தமிழில் கிடைக்கும் பல்வேறு மென்பொருள்கள் ஆகியவை குறித்து கருத்துரை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழா என்ற தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை மின்துறை அமைச்சர் தி.தியாகராஜன் வெளியிட்டார். 

அதனை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 மென்பொருள் வல்லுநர் க.அருணபாரதி, பேராசிரியர் நாக.இளங்கோ, திரட்டி நிறுவனர் ஏ.வெங்கடேஷ்     உள்ளிட்டோர்   பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் தினகரன் செய்தி


முதலியார்பேட்டையில் நடந்த தமிழ்கணினி விழிப்புணர்வு முகாமில் தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை அமைச்சர் தியாகராஜன் வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் பெற்றுக்கொண்டார். அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் விஸ்வநாதன்.

தமிழ் கணினி விழிப்புணர்வு
முகாம்: குறுந்தகடு வெளியீடு
புதுச்சேரி, பிப். 18:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் முதலியார்பேட்டை சுப்பையா இல்லத்தில் நேற்று நடந்தது. 
புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்ற தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் விஸ்வநாதன் வாழத்துரை வழங்கினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் இளங்கோ, பாரதியார் பல்கலைக்கூட உதவி பேராசிரியர் ராஜராஜன், கலை இலக்கிய பெருமன்ற துணைத்தலைவர் தேவதாசு முன்னிலை வகித்தனர். சபாநாயகர் சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்தார்.
 �தமிழா� தமிழ் மென்பொருள் குறுந்தகடை மின்துறை அமைச்சர் தியாகராஜன் வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் நாரா.கலை நாதன் பெற்றுக்கொண் டார். எல்லை.சிவக்குமார் தலைமையில் நடந்த நிறைவு விழாவில் பேராசிரியர் பசு பதி, தமிழ்நாடு கலை இலக் கிய பெருமன்ற செயலாளர் பரமேஸ்வரி, துணை தலைவர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நிரல்


 
தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்





நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் 5.30 மணி வரை

இடம்
 : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்,
66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.


 
            தொடக்க விழா                                           காலை 9.30 மணிக்கு
தமிழா தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:
மாண்புமிகு திரு. தி. தியாகராசன் அவர்கள்
மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.
அமர்வு  :1                  காலை 10.30 முதல் 11.15 வரை
தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu),
தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
தமிழில்  இணைய உலாவிகள் (Web Browsers),
ஒருங்குகுறி, TAM, TAB, TSCII TACE-16 தமிழ் எழுத்துக் குறியீட்டு
முறைகள், குறியீடு மாற்றம்
திரு. இரா.சுகுமாரன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.
பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு பயன்பாட்டாளர்கள்.
 அமர்வு 2:              காலை 11.15 முதல் 11.30 வரை
தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்.
திரு. . அருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.
 காலை 11.30    முதல் 11.45 வரை
தேநீர் இடைவேளை
அமர்வு 3:                 காலை 11.45 முதல் 12.30 வரை
வலைப்பதிவு செய்தல்: பிளாக், வேர்டு பிரசு, பிற
பேராசிரியர் நாக. இளங்கோ
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி
அமர்வு 4:                  பகல் 12.30 முதல் 1.15 வரை
கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற
முனைவர். வி. கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் ஓய்வு
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை
திரு.செல்வ.முரளி, கணினி பொறியாளர்
சிஇஓ, விசுவல்மீடியா டெக்னாலஜிஸ், கிருஷ்ணகிரி
பகல் 1.16 முதல் 2.00 வரை
உணவு இடைவேளை
அமர்வு 5:                                          பிற்பகல் 2.00 முதல் 2.30 வரை
திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி,திரட்டி
கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற
திரு. ஏ. வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.

அமர்வு 6:                              பிற்பகல் 2.30 முதல் 3.15 வரை
தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
சமுக வலைத்தளங்கள்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
திரு. கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு
அமர்வு 7:                             பிற்பகல் 3.15 முதல் 3.30 வரை
தமிழில் மின்னூல் உருவாக்குதல்
பேராசிரியர் நாக. இளங்கோ
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி
அமர்வு 8:                              பிற்பகல் 3.30 முதல் 4.15 வரை
கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
த. சீனிவாசன்,  - கணியம் மின்னிதழ் - ஆசிரியர்.
அமர்வு 9:                                        பிற்பகல் 4.15 முதல் 4.30 வரை
தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள், தமிழ் தொடர்பான பிற
திரு. தமிழநம்பி , விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
தேநீர் இடைவேளை

பிற்பகல் 4.30 முதல் 4.45 வரை
நிறைவு விழா:    
மாலை 4.45 மணி
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
இணையம்: www.pudhuvaitamilbloggers.org/ 
வலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/