Ads 468x60px

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, December 20, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்குப் பற்றிய கருத்துக்கள்

எஸ்.எல். அப்துல் ஹலீம். தலைவர், கணினி விஞ்ஞான சங்கம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம். -- S.L. Abdul Haleem Special Degree In Computer Science Faculty Of Applied Sciences South Eastern University of Sri Lanka உமது தமிழ் புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை பற்றிய Blog இனப்பார்த்தேன். மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. உமது சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்.

  முனைவர் தி. நெடுஞ்செழியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.,(இதழியல்),எம்ஃபில்.,பிஎச்.டி.,பிஜிடி.இதழியல் இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம் ஏவிசி கல்லூரி (தன்னாட்சி) மன்னம்பந்தல் - 609 305. மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு - இந்தியா. அலைபேசி: 94432 14142
 நான் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவிலான மாநாடு அளவில் திட்ட மிடப்பட்டிருந்தது. இந்த பயிற்சிப் பட்டறையை சிறப்பாக அமைத்து தந்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  இரா.அ.அரசெழிலன் ஆசிரியர்-நாளை விடியும் தனக்குத் தெரிந்த செய்திகளை யாருக்கும் சொல்லாமல், அவற்றால் தான் மட்டுமே பயன் அடையும் ஒரு பிற்போக்குத் தனம் நம்மிடையே மிகப்பெரும்பாலோருக்கு உண்டு. இந்தத் தன்மையிலிருந்து மிகவும் மாறுபட்டு புதுச்சேரியில் சில தோழர்கள் இணைந்து புதுச்சேரி வலைப்பதிவர் சிரகம் என்ற அமைப்பினைத் தொடங்கி, கடந்த 09.12.2007 அன்று வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை ஒன்றினைப் புதுச்சேரி சற்குரு உணவகக் கூட்ட அரங்கில் மிகமிகச் சிறப்பாக நடத்தினர். தோழர்கள் கோ. சுகுமாறன், இரா.சுகுமாறன், முனைவர் நா.இளங்கோ, முனைவர் மு. இளங்கோ ஆகியோரின் முன் முயற்சியிலும் பெரு முயற்சியிலும் இக்கருத்தரங்கமும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.

  திரு தாமரைக்கோ, ஆசிரியர். திசம்பர் 9, 2007 அன்று புதுச்சேரி - சற்குரு விடுதியில் தமிழ்க் கணிப்பொறி (கணினி) வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப் பயற்சிப் பட்டறை தமிழக அளவிலேயே கொடுக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். தமிழ் மொழி எல்லாத் தளங்களிலும், எல்லாக் களங்களிலும், எல்லா வெளிப்பாட்டு ஊடகங்களிலும் தங்கு தடையின்றி வரவேண்டுமெனில், இப் பயிற்சி எல்லாருக்கும் தரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆங்கிலத்தைத் தெரிந்தவன்தான் அறிவுடையவன்; ஆங்கிலத்தைப் படித்தால் மட்டுமே அறிவு பெறமுடியும் என்ற கோணல் கருத்துகளை யெல்லாம் மாற்றவேண்டுமெனில் கணிப்பொறி மற்றும் அதைச்சார்ந்த ஊடகங்களின் வழியாக ஒரு போரையே நடத்த வேண்டியுள்ளது. இப் பயிற்சி ஒரு தொடக்க நிலையாக இருந்தாலும் தெடர்ந்து செய்யப்படவேண்டியது இன்றையச்சூழலில் மிகவும் ஏற்புடையதாகும்.

  இரா.அழகிரி, தமிழர் தேசிய இயக்கம். இந்த கணினி பயிற்சி பயிலரங்கு மிகச்சிறப்பான முறையில் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. ஓரளவு கணினி பயிற்சி உடையவர்கள் தங்களை மேலும் ஒரு இணைய தளம் தொடங்கி கருத்துக்களை உலகறியச் செய்ய இந்த பயிற்சிப் பயிலரங்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பயிலரங்குகள் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் புரிகிற வகையில் வரும் காலங்களில் எளிமையாக்கி நடத்தப்படவேண்டும்

. மா.தமிழ்ப்பரிதி ஆசிரியர் தமிழகம் இணையம்http://www.thamizhagam.net/ இது போன்ற பயிற்சிகள் கிராமப்புற மக்களும் பயனுறும் வகையில் கிராமங்களில் சென்று பயிற்சி அளிக்கப்படும் என்று நிகழ்ச்சி நாளன்று அறிவிக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டும். புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை தமிழ்க்கணினி உலகிற்கு நல்லதொரு தொடக்கமாகும். தமிழ்க்கணினி ஆய்வுககளுக்கும் கல்விக்கும் இப்பயிற்சிப்பயிலரங்கு வித்திட்டுள்ளது. தமிழ் இணையத்தினை ஊரக மக்களுக்கு கொண்டு சேர்க்க இச்சிறகம் பாடுபட வாழ்த்துகள்.

  தமிழநம்பி, விழுப்புரம் ஐயா, வணக்கம். 9-12-2007-இல் புதுவையில் நடந்த 'வலைப்பதிவர் பயிலரங்'கில் பயிற்சி பெற்றோரில் நானும் ஒருவன். அமைப்புக்குழுவினர் அனைவரும் மேம்பட்ட - உயர்ந்த - மனவுணர்வுடன் ஈடுபட்டுப் பயிலரங்கைச் சிறப்பாக நடத்தியமை மிகமகிழ்ச்சியாகவும் ஒருவகையில் வியப்பாகவும் இருந்தது! புதுவையிலுள்ள அறிவார்ந்த தமிழிளைஞரை எண்ணி அன்று முழுவதும் இறுமாந்து பெருமித உணர்வுடன் இருந்தேன். பயிலரங்கம் பற்றி 'நற்றமிழ்' இதழில் எழுதுவேன். பயிலரங்கின் பயனாக, நானும் வலைப்பதிவர்களுடன் சேர்ந்துள்ளேன். என் வலை: http://www.thamizhanambi.blogspot.com ஆகும். இரண்டுமுறை நான் சிக்கல் தீர்த்துக்கொள்ள அணுகியபோதும் தயக்கமின்றி ஆர்வத்துடன் உதவினீர்கள். மிகவும் நன்றி. மீண்டும் தேவைப்படின் உங்களை அணுகுவேன். பொறுத்தாற்றுக!-அன்பன், தமிழநம்பி, விழுப்புரம் 9443440401

Friday, December 14, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய மென்பொருட்கள்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக பல்வேறு வகையான மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த மென்பொருட்களை வலைப்பதிவர் சிறகத்தின் செயல் இளைஞரான நண்பர் க. அருணபாரதி தயாரித்துள்ளார். வலைப்பதிவர் சிறகத்தில் இரவு பகலாக பணியாற்றி இந்த மென்பொருட்களை அவர் தயாரித்துள்ளார். அவருக்கு வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக முதலில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மென்பொருள்கள் முதல் வெளியீடாக வெளிவந்துள்ளதால் பயனாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்த பின் சரி செய்து இரண்டாவது வெளியீடாக வெளியிட உள்ளோம். திருவள்ளுவர் தமிழ் எழுதி முதலில் இருப்பது திருவள்ளுவர் தமிழ் எழுதி இதில் தமிழ் 99, பாமினி எழுத்துருக்களின் விசைப்பலகையை தேர்வு செய்து நேரடியாக தட்டச்சு செய்யலாம். இணணய இணைப்பி இரண்டாவது படத்தில் இருப்பது தமிழ்த் தளங்களின் இணைப்புகளை வழங்கும் இணணய இணைப்பி மென்பொருள் இதனை கணினியில் நிறுவினால் தமிழ் இணையப் பக்கங்களை எளிதில் இணைப்பு வழங்குகிறது எழுத்துருக்கள் நிறுவி மூன்றாவது படத்தில் உள்ளது எழுத்துருக்கள் நிறுவி இதனை பயன்படுத்தி எழுத்துருக்களை நிறுவ முடியும். நமது கணினி நான்காவது உள்ளது நமது கணினியை பற்றி அறிந்து கொள்வதற்கான மென்பொருளாகும். இதைப் பயன்படுத்தி தங்கள் கணினியைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் ஓசை அய்ந்தாவதாக உள்ள மென்பொருள் தமிழ் ஓசை இந்த மென்பொருளை பயன்படுத்தி இசை கேட்கலாம். படங்களைப் பார்க்கலாம். முகவரி குறிப்பேடு ஆறாவதாக உள்ளது முகவரி குறிப்பேடு இதனைப் பயன் படுத்தி முகவரிகளை சேமிக்கலாம். இந்த மென்பொருட்கள் அனைத்தும் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக அளித்துள்ளோம். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தளத்தில் இலவசமாக விரைவில் வெளியிடப்படும். இந்த மென் பொருட்களில் ஒருங்குறி எழுத்துறுவை பயன்படுத்தி தயாரித்துள்ளமையால் இதற்கு WINDOWS XP யின் வரிவடிவ எழுத்துக்களுக்கான ஆதரவை நிறுவினால மட்டுமே இயங்கும். மேலதிக விவரம் தேவை எனில் arunabharthi@gmail.com அல்லது rajasugmaran@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பார்வையாளர்கள் கருத்து -1

    புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பட்டறை நிகழ்ச்சிகள் பற்றி வலைப்பதிவர்களின் கருத்துக்களின் முதல் தொகுப்பின் இணைப்பு :
  1. புதுச்சேரி ( பாண்டி) வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு
  2. - தமிழ்வெளி செய்திகள்
  3. புதுச்சேரி தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை இனிதே ஆரம்பமானது - வினையூக்கி
  4. நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து - ஓசை செல்லா
  5. புதுவைப் பட்டறை ஒரு மைல்கல் - வினையூக்கி
  6. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை தமிழ்வெளி செய்திகள்
  7. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை 2007 - அன்பே சிவம்
  8. புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்! - ஓசை செல்லா
  9. தமிழ் இனி மெல்ல வளரும். புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிலரங்கு குறித்து என் பார்வை - தூரிகா வெங்கடேஷ்
  10. புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - செய்தி ! - ஆயுத எழுத்து
  11. புதுச்சேரி வலைபதிவர் பயிற்சிப் பயிலரங்கம் - புகைபடங்கள்! - ஆயுத எழுத்து
  12. புதுவை வலைப் பதிவர் பட்டறை, துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை ,வீடியோ - பகுதி 1 - ஓசை செல்லா
  13. தமிழகம் ஊடக நிறுவனம் - அறிவிப்புகள்
  14. கூகுல் குழும நண்பர்கள்
  15. கூட்டாஞ்சோறு! - வலையுலக ஸ்பெஷல்! - லக்கிலுக்
  16. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள் - மா.சிவகுமார்
  17. பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு - ஓசை செல்லா
  18. புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! - க.அருணபாரதி
பதிவர் கருத்துக்கள் - பகுதி-2. தொடரும்...

Tuesday, December 11, 2007

புதுச்சேரி பதிவர் பட்டறை பத்திரிக்கை செய்திகள்-2

தினமலர்11-12-2007 தினமலர்11-12-2007 முப்படைத்தளபதி 11-12-2007 தினமணி 11-12-2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிகை செய்திகள்

தினகரன் - 10-12-2007. தினமணி - 10-12-2007. தி இந்து - 10-12-2007. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 10-12-2007.

Monday, December 10, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கவிதை நிகழ்வு - ஒலிவடிவம்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் 'ஓசை செல்லா' வலைப்பூவில் ஒலிப்பேழைகளைப் பதிவேற்றுவது குறித்து செய்முறை மூலம் பயிற்சி அளித்தார். இந்நிகழ்வின் போது முத்துராஜ் என்ற இளைஞரை அழைத்து ஒரு கவிதை வாசிக்கச் சொன்னார். அரங்கமே அதிரும் வகையில் ஒரு கவிதையை வாசித்தார் முத்துராஜ். அவரது கவிதையை ஒலி வடிவில் கேட்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும். கவிதையைக் கேட்க...

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - இந்து பத்திரிகை செய்தி

புதுச்சேரியில் நடந்த வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை பற்றி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது: Tamil computing, blogging made easier Workshop discusses technological developments in the field Catching on: A blogger at work at the workshop on Tamil computing in Puducherry on Sunday. PUDUCHERRY: The next edition of e-Kalappai, a keyboard driver for using Tamil in computers, will be ready by January 2008, S. Muguntharaj, a software developer and coordinator of the e-Kalappai Project told The Hindu on Sunday. Speaking on the sidelines of a workshop for bloggers on Tamil computing, he said e-Kalappai did not require a separate keyboard to type Tamil. “We developed the first version in 2001 and the second in 2002. We took a license from Keyman, an Australian company that has developed a driver (software) that can be used for all languages and have adapted it to incorporate Tamil,” he explained. The software, which can be used on all Microsoft Windows applications, takes just about a minute to install. It will appear as an icon on the task bar for easy access. The driver can be downloaded for free from http://thamizha.com. “ The software takes up just 1.2 MB of space. A team of persons interested in popularising Tamil computing have created it. Technology does not know language. So we thought language must not be a constraint for people who don’t know English,” he added. Bloggers were also introduced to Ubuntu, an easy-to-install Gnu/Linux based operating system. M. Ramadoss, founder of the Ubuntu Tamil community list, said it was a community-maintained software developed by people from India, Sri Lanka and the U.S. “There are about 20 active members in the project. The source code of this software can be seen, changed and developed by anyone who is interested in it,” he added. According to R. Sugumaran, coordinator of Puducherry Bloggers Wing, those who attended the workshop were also taught how to create blogs in Tamil, use Tamil e-mail (minn anjal), chat (arattai), attach pictures and how to link web pages. Ko. Sukumaran, an active blogger, explained that there were about 3,000 Tamil bloggers. Thamiz manam, Thamiz veli and Thenkoodu were some of the popular blog aggregates (Thirattugal).

Sunday, December 9, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிறைவு விழா

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நிறைவு பெற்றது.

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை பற்றி தமிழ் முரசு செய்தி - படம்

Saturday, December 8, 2007

Thursday, December 6, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிகழ்ச்சி நிரல்

காலை நிகழ்வு தமிழ்க் கணினி
காலை 09.00 - 9.15 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)
காலை 09.15 - 9.30 நிகழ்ச்சிகள் பற்றி அறிமுகம் (15 நிமிடம்) - கோ.சுகுமாரன் காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - பேராசிரியர் நா. இளங்கோ ஏகலப்பை (15 நிமிடம்)

குறள் (5 நிமிடம்)

இளங்கோ (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது -

பேராசிரியர் மு. இளங்கோவன்

தமிழ் 99 (15 நிமிடம்)

ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.31-11.00 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - க.அருணபாரதி

ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)

எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)

தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)

தமிழில் அரட்டை (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 11.00- 11.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

காலை 11.15- 12.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார் & உபுண்டு ராமதாஸ்

விண்டோஸ் (10 நிமிடம்)

லினக்ஸ் (25 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.00- 12.30 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் - தமிழா" முகுந்த்

அதியன் இணைப்பு (10 நிமிடம்)

பத்மா இணைப்பு(10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.30- 01.00 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்

விக்கிப்பீடியா (10 நிமிடம்)

மதுரைத்திட்டம் (5 நிமிடம்)

யாழ் நூலகம் (5 நிமிடம்)

பிற தளங்கள் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)

பகல் 02.00-03.00 வலைப்பதிவு அறிமுகம் - பேராசிரியர் நா. இளங்கோ

மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5நிமிடம்)

வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (10நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)

வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது(5 நிமிடம்)

மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)

கேள்வி பதில் (15 நிமிடம்)

பகல் 03.00-03.30 படங்கள் இணைப்பது (5நிமிடம்) - பிரேம்குமார்

காட்சிப்படம் இணைப்பது (5 நிமிடம்)

ஒலிகளை இணைப்பது (15 நிமிடம்) - ஒசை செல்லா

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 03.30- 04.00 வலைப்பதிவு தொடக்கம் - நந்தக்குமார்

(WORD PRESS) (10 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 04.00- 04.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

பகல் 04.15- 04.45 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) - லக்கிலுக்

கேள்வி பதில் (10 நிமிடம்)

இணைய இதழ்களில் எழுதுவது

பகல் 04.45- 05.00 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) மா.சிவக்குமார்

இணைய இதழ்களில் எழுதுவது (8 நிமிடம்)

- பேராசிரியர் மு.இளங்கோவன்

பகல் 04.45- 05.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்

(8 நிமிடம்)

சொந்தத் தளத்தில் வலைப்பதிவு word press எப்படி நிறுவுவது

(15 நிமிடம்)

கேள்வி பதில் (7 நிமிடம்)

பகல் 05.15- 05.30 தமிழைக் கணினியில் பயன்படுத்துவதில் இன்றைய சவால்கள் அவற்றிற்கான சாத்தியமாகக்கூடிய தீர்வுகளும்.

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பங்கேற்போர் இறுதிப் பட்டியல்

அன்புடையீர், வணக்கம். "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்பவர்களின் இறுதிப் பட்டியல் இது. இப்பட்டியலில் பெயர் இடம்பெற்று பட்டறையில் கலந்துக் கொள்ள முடியாதவர்கள் அருள்கூர்ந்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். பெயர் பதியாமால் பலர் வாய்ப்புக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஏதுவாக இருக்கும். பதிவு செய்து பெயர் விடுபட்டவர்கள் உடனடியாக தொடர்புக் கொள்ளவும். இறுதிப் பட்டியல்:
  1. திரு. பி.எஸ்.சந்திரமோன்,
  2. திரு. இரா.அ.அரசெழிலன்,
  3. திரு. மா.தமிழ்ப்பரிதி,
  4. திரு. கே. இராஜா,
  5. முனைவர் தி. நெடுங்செழியன்,
  6. திரு. செல்வமுத்துக்குமரன்,
  7. திரு. விக்ரம்,
  8. திரு. முத்துசிவகுமரன்
  9. திரு. என்.குமார்,
  10. தனலட்சுமி,
  11. எம்.ஆர்.மல்லிகா,
  12. முனைவர் எம்.இ.கிருஷ்ணகுமார்,
  13. முனைவர் எ.மணி,
  14. முனைவர் வி.மணி,
  15. திரு. சிவனந்தம்,
  16. திரு. டைடஸ்ராஜ்,
  17. திரு. எம்.இராமலிங்கம்,
  18. திரு. பாலு இரங்கநாதன்,
  19. திரு. எஸ்.பக்கிரிசாமி,
  20. திரு. இ.எழில்வசந்தன்,
  21. திரு. அருண்,
  22. திரு. எஸ்.சிவானந்தம்,
  23. திரு. எஸ்.சீனிவாசன்,
  24. சாந்தி,
  25. திரு. சையது முஸ்தபா,
  26. திரு. வைகை இராமலிங்கம்,
  27. மாலா ஜெயந்தி,
  28. திரு.ஜெயராமன்,
  29. திரு.கீழை இலக்கியன்,
  30. திரு.வெங்கடேசன்,
  31. திரு.ஆர்.மணி,
  32. திரு.விஸ்வநாத்
  33. திரு.டி.ஆர்.இராமலிங்கம்,
  34. திரு.இரா.முத்துராஜ்,
  35. திரு.ஆர்.ஆர்.இராஜ்குமார்,
  36. திரு.மு.பாலசுப்பிரமணியன்,
  37. திரு.சு.சண்முகசுந்தரம்,
  38. திரு.கோ.செழியன்,
  39. மேகலா செழியன்,
  40. திரு.எஸ். சுவாமிநாதன்,
  41. திரு.இளையபாரதி,
  42. திரு.கணேஷ்,
  43. திரு.நீலவேந்தன்,
  44. திரு.எஸ்.ஆதிசங்கர்,
  45. கே.பழனிவேலு,
  46. தமிழ்ச்செல்வி புரூடஸ்,
  47. ஏ. பிரேமா ஆதிசங்கர்,
  48. எம்.இராஜாமணி,
  49. இராஜலட்சுமி,
  50. திரு.த. தண்டபாணி,
  51. திரு.அ.புகழேந்தி,
  52. திரு. தி.திருநாவுக்கரசு,
  53. திரு. சு.பாலசுந்தரம்,
  54. திரு. டி.இரவிசங்கர்,
  55. ஆர்.வித்யா,
  56. திரு. பி.கார்த்திக்
  57. திரு. சுந்தரமுருகன்,
  58. திரு. புதுவை யுகபாரதி,
  59. திரு. பா.திருநாவுக்கரசு,
  60. எம்.எஸ்.காந்திமேரி,
  61. மூ.சத்யா,
  62. ச.சிவப்பிரியா
  63. செ.சிவசங்கரி,
  64. நா.குணசுந்தரி,
  65. ஆ.தீபிகா,
  66. இரா.சானகி,
  67. இரா.கலைவாணி,
  68. தே.ஜெயந்தி,
  69. க.இரேவதி,
  70. முனைவர் இரத்தின புகழேந்தி,
  71. சி.கீதா,
  72. எ.கலைச்செல்வி,
  73. கே.இராஜகுமாரி,
  74. எ.சந்திரகலா
  75. எம்.சுபாஷினி,
  76. எம்.வெங்கடேசன்,
  77. திரு.சீ.சந்திரசேகரன்,
  78. திரு.பி.குழந்தைசாமி,
  79. திரு.வெங்கடேசபெருமாள்,
  80. திரு.ஜெ.பகிரதன்,
  81. திரு.ஜெயராஜ் தனியேல்,
  82. திரு.சுந்தர கலிவரதன்,
  83. திரு.ஆர்.சேகர்.
  84. திரு.கே.குணசேகரன்,
  85. திரு.முருகதாஸ்,
  86. திரு.தமிழநம்பி,
  87. திரு.எழில் இளங்கோ,
  88. திரு.கோ.தாமரைக்கோ,
  89. திரு.சிவ.இளங்கோ,
  90. திரு.யாழினி சந்திரசேகர்,
  91. பேராசிரியர் உரு.அசோகன்,
  92. திரு.கமலச்செல்வம்,
  93. திரு.மு.சின்னமருது,
  94. திரு.மோசஸ்,
  95. திரு.பூராசாமி,
  96. திரு.செந்தமிழினியன்,
  97. திரு.அருணன்,
  98. திரு.ச.குணசேகரன்,
  99. திரு.சி,சேகர்,
  100. திரு.கலைச்செழியன்.
இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இன்னும் பல பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். கிராம அளவில் சிறு சிறு குழுக்களாக அமைத்து அவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழி முன்னேடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,

உலாபேசி: + 91 94431 05825 மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

Wednesday, December 5, 2007

"தமிழ்வெளி" நிறுவனத்திற்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு "தமிழ்வெளி" (திரட்டி) நிறுவனம் ரூபாய் 5,000/- (ரூபாய் ஐந்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது. பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். "தமிழ்வெளி" நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, December 3, 2007

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இப்பட்டறை சிறப்பாக நடைபெற புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் உதவ முன்வந்துள்ளார். சற்குரு உணவக அரங்கம் மற்றும் உணவு ஆகியவற்றின் செலவுகளைத் தன் பொறுப்பில் செய்ய உறுதி அளித்துள்ளார். பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, November 30, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - செலவுப் பட்டியல் - நிதி தாரீர்!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 அன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை குறித்த செலவு பட்டியலைக் கீழே கொடுத்துள்ளோம்.

செலவுப் பட்டியல்:

1. அரங்கம் 1 நாள் வாடகை - ரூ. 7000

2. மதிய உணவு, தேநீர், பிற ரூ.13000

3. விளக்க துண்டறிக்கை ரூ. 400

4. மடல் தாள்கள் ரூ. 400

5. நன்கொடை சீட்டு ரூ. 200

6. தமிழ்க் கணினி மலர் ரூ.15000

7. அழைப்பிதழ் (நிகழ்ச்சி நிரல், நிறைவு விழா) ரூ. 1000

8. சுவரொட்டி ரூ. 1000

9. பதாகைகள் (எண்ணிக்கை: 2) ரூ. 500

10. சிறப்பு அழைப்பாளர் தங்குதல், உணவு ரூ. 1500

11. கணினி (வாடகைக்கு) ரூ. 7500

12. கணினி இணைப்புக்கு ரூ. 1000

13. இணைய இணைப்பு ரூ. 1200

14. குறுந்தகடு (எண்ணிக்கை: 200) ரூ. 1700

15. குறுந்தகடு மேல் அச்சு ரூ.600

16. குறுந்தகடு மேல் உறை _ ரூ. 200

17. கோப்புகள் (எண்ணிக்கை: 150) ரூ 1500

18. கோப்புகள் மீது அச்சு ரூ. 200

19. குறிப்புச் சுவடி (எண்ணிக்கை: 150) ரூ. 1500

20. குறிப்புச் சுவடி மீது அச்சு ரூ. 200

21. எழுதுகோல் (எண்ணிக்கை: 150) ரூ. 750

22. அடையாள அட்டை ரூ. 300

23. பங்கேற்போருக்கு சான்றிதழ் ரூ. 1000

24. அஞ்சல், கூரியர் செலவு ரூ. 500

25. நகல் எடுக்க ரூ. 200

26. பிற ரூ. 1000

மொத்தம் செலவு ரூ. 59,350/-

தமிழ் மொழி ஏற்றம்பெற நடத்தப்படும் இப்பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவு தர வேண்டுகிறோம். கணிசமான தொகை நிதி அளித்து ஆதரவாளர்கள் ஆக வேண்டுகிறோம். பிறர் தங்களால் முடிந்தளவு நிதி அளித்து உதவ வேண்டுகிறோம்.

நிதி அளிக்க தொடர்பு கொள்க:

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,

உலாபேசி: + 91 94431 05825 மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

"ஹோப்" நிறுவனத்திற்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் "ஹோப்" நிறுவனம் ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது. பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். "ஹோப்" நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, November 28, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறையில் துணைவேந்தர் பொன்னவைக்கோ பங்கேற்கிறார்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்கள் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார்.

திரு பொன்னவைக்கோ அவர்கள் தமிழகத்தில் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் என்பதும், இணையத்தில் தமிழ் மொழி உரிய இடம்பெற பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு பொன்னவைக்கோ அவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டு உரையாற்றுவது அனைவருக்கும் பயனளிக்கும்.

பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளமைக்கு அவருக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

Tuesday, November 27, 2007

“தமிழா” முகுந்த் அவர்களுக்கு நன்றி – புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய இணைய தளம் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை நடத்த திட்டமிடுவதற்கு முன்பாக பதிவு செய்வதற்காகவும், நிர்வகிப்பதற்கும் ஒரு தளம் தேவை என்றும், அதற்கான புதிய தளம் ஒன்றும் தொடங்குவது என திட்ட மிட்டிருந்தோம். ஆனால், பின்னர் அது தேவையில்லை என்று முடிவு செய்தோம். அதன்பின் நண்பர் வெங்கடேஷ் புதுச்சேரியில் நடத்தி வரும் தூரிகா இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று ஒரு படிவம் செய்து அனுப்பி இருந்தார், இதனால் அதில் புதிய பதிவர்களை பதிவு செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால், அனைத்து தமிழ்ப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், ஊர் வாரியாக பிரிந்து இருக்க வேண்டாம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. இதனால் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தளத்தை பயன்படுத்தலாம் என்று கருதியிருந்தோம். அது இயலாமல் போனதால் மீண்டும், தூரிகா இணைய தளத்தில் பதிவைத் தொடங்குவது என முடிவு செய்து அதில் பதிவு செய்திருக்கிறோம். இந்நிலையில் திரு முகுந்த் அவர்களை பதிவர் பட்டறையில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தோம். எங்கள் பதிவு "பிளாக்" இல் இருந்ததால் புதிதாக ஒரு இணைய தளம் ஒன்றை பதிவு செய்து தமிழா சிஸ்டம் நிறுவனத்தின் சார்பாக எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு அன்புடன் வழங்கியுள்ளார். அத்துடன் எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு குறிப்பேடுகளை தன் செலவில் வழங்கவும் முன்வந்துள்ளார். அவருக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, November 21, 2007

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வரும் டிசம்பர் 9 அன்று ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடத்த உள்ளதை அறிந்திருப்பீர்கள். கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கணினியில் தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பை இலவசமாக வழங்கி பயிற்சி அளிப்பது எனத் திட்டமிட்டுள்ளோம். அந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ்மணம் நிர்வாகம் எங்களுக்கு ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. ... என்று திருவள்ளுவர் சொன்னது போல, இது மிகப் பெரிய உதவியாகவும், நாங்கள் கேட்காமலேயே மனமுவந்து அளித்துள்ளமையால் இதனை அதைவிட பெரியதாக நாங்கள் கருதுகிறோம். தமிழ்மணதிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

Tuesday, November 13, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை புதிய பதிவர்கள் கவனத்திற்கு!!

தமிழ்க் கணினி பயிற்சி என்பது முழுமையாக கணினியில் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி அல்ல. கணினியில் அடிப்படை தெரிந்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க இயலும். சிலர் முழுமையான கணிப்பொறி பயிற்சி என்று கருதி இதில் பதிவு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்। ஆனால், இது அத்தகைய பயிற்சி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்। பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்களின் தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரியை அவசியம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்।

Monday, November 12, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தினமணி" செய்தி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "டெக்கான் கிரானிக்கல்" செய்தி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தினகரன்" செய்தி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தினமலர்" செய்தி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தி இந்து" செய்தி

Wednesday, October 31, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு!

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று, புதுச்சேரியில் "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இதுகுறித்து, சென்னை வலைப்பதிவர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. புதுச்சேரி பயிற்சிப் பட்டறைக்கு சென்னை வலைப்பதிவர்கள் எந்தளவு ஒத்துழைக்க முடியும் என்பதும், ஏற்கனவே வலைபதிவர் சந்திப்பு நடத்தியது பற்றிய அனுபவம் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்படும். அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாள்: 04-11-2007 ஞாயிறு. நேரம்: காலை 11-00 மணி. இடம்: இக்சா மையம் (ICSA Center), 107, பாந்தியன் சாலை, எழுப்பூர் அருங்காட்சியம் எதிரில், எழும்பூர், சென்னை-600 008. இக்சா தொலைபேசி: 044 - 28194905. குறிப்பு: அறை சுகுமாரன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தொடர்புக்கு: இரா.சுகுமாரன் உலாபேசி: 94431 05825. மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

Saturday, October 27, 2007

புதுச்சேரி பதிவர் பட்டறையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பதிவு செய்க

தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை
நாள்: 09-12-2007 ஞாயிறு நேரம்: காலை 9.00 முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: ஓட்டல் சற்குரு, புதுச்சேரி.
“மெல்லத் தமிழ் இனி சாகும்” என்பதைப் பொய்யாக்கி இன்று தமிழ் மொழி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அறிவியல் துறையில் தமிழ்ப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிற மொழியில் உள்ள கலைச் சொற்கள் தமிழில் ஆக்கம் செய்யப்பட்டு தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிவியல் வளர்ச்சியின் உச்சம் இன்றைக்கு கணினியின் பயன்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால், கணினியில் தமிழ்ப் பயன்பாடு போதிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். முறையாக கணினிப் பயின்றவர்கள்கூட கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரிந்திருப்பதால் தமிழில் கணினி தொழில் நுட்பங்களை அறிந்திருக்கிறார்கள் என்றோ, பயன்படுத்துகிறார்கள் என்றோ கூறிவிட முடியாது. தமிழ்க் கணினி என்பது முதலில் நம் கணினியைத் தமிழ்க் கணினியாக்குவது. அதாவது, கணினியின் இயங்குதளங்களைத் (Operating Systems) தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, பரவலாக்குவது. அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவது. இரண்டாவது, கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது. குறிப்பாக தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பூக்களில் தமிழில் எழுதுவது என பல்வேறு வடிவங்களில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிப்பது. ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு போன்ற பிற மொழிகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கணினியில் படிக்க முடியும். தமிழை அவ்வாறு படிக்க முடியாத நிலை இருந்தது. ‘ஒருங்குறி’ எழுத்து (Unicode Font) வந்த பின் இந்த நிலை மாறி உலகம் முழுவதும் தமிழில் படிக்க முடியும், எழுத முடியும் நிலை உருவானது. தற்போது, தமிழ் ஒருங்குறி எழுத்து வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒருங்குறி தமிழ் எழுத்தைப் பயன்படுத்திட போதிய தொழில் நுட்ப அறிமுகமோ, பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வோ தமிழர்களிடம் போதுமானதாக இல்லை. எத்தனைத் தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் விடுவோமனால் அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற நோக்கம் நிறைவேறாது. இணைய உலகில் வலைப்பதிவுகள் (Blogs) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணினியும் இணைய இணைப்பும் மட்டும் இருந்தால், வேறு செலவு ஏதுமின்றி, ஒருவர் தன்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இன்று வலைப்பூக்கள் மாற்று ஊடகத்திற்கு வலு சேர்த்து வருகிறது. இதில் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படுகிறது. கதை, கவிதை, குறும்படம், திரைப்பட விமர்சனம் என இலக்கியப் படைப்பும், விவாதங்களும் நிகழ்த்தப்படுகின்றன. இதுபோன்று கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்குப் போதிய பயிற்சி இன்றியமையாதது. இந்நோக்கத்தை நிறைவேற்றவே “தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை. இதில் காலை அமர்வுகள் தமிழ்க் கணினி குறித்ததாகும். மதியம் அமர்வுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியதாகும். மாலை நிறைவு விழா. இதில் புதுச்சேரி முதல்வர் மண்புமிகு ந.ரங்கசாமி அவர்கள் கலந்து கொள்கிறார். இப்பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய மலர் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிப் பட்டறையில் 100 மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கணினி பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க தீர்மானித்துள்ளோம். எனவே, பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர் புதுச்சேரி வலைபதிவர் சிறகம் பதிவகம் இணையப் பக்கத்திற்குச் சென்று முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம். பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதும். பயிற்சிப் பட்டறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கீழ்காணும் தளங்களில் வெளியிடப்படும். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், அனைத்து தொடர்புகளுக்கும்: இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைபதிவர் சிறகம். உலாபேசி: + 91 94431 05825 மின்ன்ஞ்சல்: rajasugumaran@gmail.com

Monday, October 1, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் கலந்து கொள்கிறார்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக புதுச்சேரி முதல்வரை சந்தித்து கடிதம் அளித்து வலைப்பதிவர் பட்டறையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். முதல்வர் கலந்து கொள்வதாக இசைவு அளித்துள்ளார். முதல்வரை காண திரு. கோ.சுகுமாரன், திரு. செயப்பிரகாசு, திரு. அருணபாரதியுடன் இரா. சுகுமாரன் உள்ளிட்டவர்கள் முதல்வரை சந்திக்க சென்றோம். முன்னதாக புதுச்சேரி கூட்டுறவு ஒன்றியத்தில் இடம் ஒப்புதல் பெறுவது என முடிவு செய்திருந்தோம். பின்னர் புதுச்சேரி சர்குரு உணவகத்தில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம். இந்த இடம் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது. சுமார 100 பங்கேற்க வசதியானது. நகரின் உள்ளே அமைந்துள்ளது அமைதியான இடம் கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போக்குவரத்து வசதியுடையது.

Friday, September 21, 2007

புதுவை வலைப்பதிவர் சிறகம் - ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இரண்டாவது ஆலோசனைக்கூட்டம் வரும் 27-09-2007 வியாழன் அன்று இரவு 7.00 மணியளவில் புதுச்சேரி பாரதிப்பூங்காவில் நடைபெற உள்ளது. இடம்: புதுவை சட்டமன்றம் எதிரில். ஆயிமண்டபம் அருகில் இதில் நிகழ்ச்சிக்கு யார் யாரை அழைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ள இருக்கிறோம். பதிவர்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். வர இயாலாதவர்கள் மின்னஞ்சல் மூலம் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறோம். மின்னஞ்சல் முகவரி: rajasugumaran@gmail.com தொடர்புக்கு: 94431 05825

Tuesday, September 11, 2007

"தமிழ்க் கணினி" - புதுச்சேரியில் வலைப்பதிவர் பட்டறை

புதுச்சேரியில் பதிய பதிவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2007, 9 ஆம் நாள் இப்பயிற்சி வகுப்பு நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பானது முற்றிலும் புதியவர்களுக்கானதாகும். இதில் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, ஒருங்குறி எழுத்துறு பயன்படுத்துவது அதற்கான மென்பொருட்களை நிறுவுவது வலைத்தளங்களில் எழுதுவது உள்ளிட்டவற்றுக்கு நேரடி பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர். இந்த பதிவர்களுக்கு ஏற்படும் தொழில் நுட்ப பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாகவே இந்த பட்டரை நடத்துவது என கருதி தொடக்கத்தில் பேசுவந்த நிலையில் பின்னர் புதியவர்களுக்குமாக சேர்த்து மொத்தமாக 100 பேர்களுக்கு இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை மாலை என இரு வேளையும் நடைபெறும். காலை கணினி பற்றி பொதுவானத் தகவல்களும், மாலை பதிவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். இந்த பதிவர் பட்டறை "தமிழ்க் கணினி"" என்ற பெயரில் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதன் நோக்கம் கணனி முழுமையும் தமிழ்படுத்த வேண்டும் என்பதுமாகும். இதனால், தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். அதனுடன் ஏகலப்பை, உள்ளிட்ட சென்னைப் பதிவர்கள் வழங்கிய மென்பொருட்களும், புதிய மென்பொருட்கள் பலவும் வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதில் தமிழ் 99 விசைப்பலகை பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கணனியில் தமிழ் என்பது தொடர்பான விவரங்கள் அங்கிய ஒரு கணனி மலர் ஒன்று வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளோம். தொடக்கமாக கணனி தொடர்பான தொழில் நுட்பம் அறிந்தவர்களை அழைத்து தொடங்கி வைப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். தமிழ் நாடு அரசு செய்துள்ள பல பணிகளை புதுவை அரசும் மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தும் வகையில் புதுவை முதல்வரை அழைத்து இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக "சென்னை வலைப்பதிவுப் பட்டறை" போலவும் அதில் கூறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பட்டறையாக இது இருக்கலாம். "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்" என்ற பெயரிலான அமைப்பு இந்த பட்டறையை நடத்துவது எனவும் முடிவு செய்து இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ் ஆர்வலர்கள், கணனி ஆர்வலர்கள், இணையப் பதிவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், சில திட்டங்களும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. அது பற்றி பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும். எல்லாமே இலவசமாக இல்லாமல் குறைந்த பட்ச நுழைவுக்கட்டணம் வசூலிப்பது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இம்முடிவு நிதி என்ற பிரச்சனையை அடிப்படையாய் கொண்டது அல்ல. இவ்வாறு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது என்பது திட்டமிட்ட 100 பேர் என எண்ணிக்கையை குறைத்து சிறப்பாக செய்ய இயலும் என்பதாலேயே இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு சலுகை உண்டு. பதிவர்களின் ஆலேசனை வரவேற்கப்படுகிறது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்திற்காக, இரா.சுகுமாரன், தொடர்பு எண்: 94431 05825

புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

“ தமிழ்க் கணினி ”
வலைப்பதிவர் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை கலந்தாய்வுக் கூட்டம்
------------------------------------------------------------------------------
நாள்: 09-09௨007, ஞாயிற்றுக்கிழமை, காலம்: சரியாக மாலை 5.00 மணி இடம்: பிலால் உணவகம், அண்ணா சாலை, புதுச்சேரி.1
------------------------------------------------------------------------------ வணக்கம்,
கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து புதுச்சேரியில் ''தமிழ்க் கணினி'' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தலாம் என எண்ணியுள்ளோம். இப்பயிற்சியானது கணினியில் முறையாகப் பயிற்சி பெறாதவர்களை நோக்கியதாகும்.
முறையாக பயின்றவர்கள், பயிற்சிப் பெற்றவர்கள் கூட கணினியைத் தமிழில் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்தால் மட்டுமே தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அறிந்திருக்கிறார்கள் என்றும், அதனை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறிவிட முடியாது. பலருக்குத் தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் மிகவேகமான வளர்ச்சிப் பற்றி போதிய அறிமுகம் இல்லாமலேயே உள்ளது. எனவே, தமிழ் மொழியில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கத்தோடு இப்பயிற்சிப் பட்டறையை முதற்கட்டமாக நடத்தலாம் என எண்ணுகிறோம்.
இந்த பயிற்சிப் பட்டறையில் தமிழில் கிடைக்கும் மென் பொருட்களை அறிமுகம் செய்வது, அதனை கணினியில் நிறுவுவது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, தமிழில் இணைய தளங்களில், வலைப்பூக்களில் எழுதுவது உட்பட தமிழ்க் கணினி தொடர்பான தொழிற்நுட்பங்கள் குறித்துப் பயிற்சி அளிப்பதன் மூலம் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகப்படுத்தலாம்.
இப்பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த தமிழ் ஆர்வலர்கள், கணினி ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டலின் படி செயல்பட தீர்மானித்துள்ளோம்.
இதற்கான முதற்கட்ட கலந்தாய்வுக் கூட்டம் மேற்கண்டவாறு நடைபெற உள்ளது. தாங்கள் இக்கூட்டத்தில் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொண்டு, தங்கள் மேலான கருத்துக்களை வழங்கி, செம்மொழிக்கு கணினித் தமிழ் மூலம் மேலும் சிறப்பு சேர்க்க ஆதரவுதர வேண்டுகிறோம்.
தமிழ்க் கணினிக்காக,
(இரா.சுகுமாரன்)
-------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: இரா.சுகுமாரன் 94431 05825. மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
 

Sample text

Sample Text