Ads 468x60px

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, November 4, 2012

இரவி – இராசன் – சரவணக்குமார் கைது: கருத்துரிமை மீதான காவல்துறை தாக்குதல் - கி.வெங்கட்ராமன்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் கீழ்க்கண்ட இக்கருத்தை மிகவும் வரவேற்கிறது. இந்த கருத்துகளை எமக்கும் மிகவும் உடன்பாடான கருத்து என்பதால் இதனை முன்வைத்து பொது விவாதத்திற்குட்படுத்த வேண்டும் எனக்  கருதுகிறோம்.

மேலும்,  இந்த  சட்டம் எல்லோருக்குமானதல்ல. "சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை என்ற அரச உண்மையைத்தான் இது காட்டுகிறது."  என்று கீழே இந்த சட்டத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மையாகும். எனவே "இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டத்தினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்" என்ற கோரிக்கையையும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் முன்வைக்கிறது. எனவே, இந்த கருத்தை முன்வைத்து செயல்படவேண்டுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
...................................................

இரவி – இராசன் – சரவணக்குமார் கைது:
கருத்துரிமை மீதான காவல்துறை தாக்குதல்
கி.வெங்கட்ராமன்

அராபிய வசந்தம் எழுச்சிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் சமூக ஊடகத்தின் மீது தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்திய ஏகாதிபத்தியம் இதற்கான சட்டங்கள் இயற்றியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், அண்மைக் காலத்தில் திருத்தங்கள் செய்து, அடக்குமுறைக்கான தனது ஆயுதங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

இந்திய ஏகாதிபத்தியத்தின் கங்காணி ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி இச்சட்டத்தின் கோரத்தன்மையை சனநாயக சக்திகளுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை திறனாய்வு செய்து எழுதியதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த சிறுதொழில் முனைவர் இரவி சீறிதர் என்பவர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், புதுவை இணையக் குற்றத்துறைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் வதேராவை விட அதிகம் சொத்துகளைக் குவித்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கடந்த 2012 அக்டோபர் 20ஆம் நாள், தனது ட்விட்டர் இணையப் பக்கத்தில், புதுவை இரவி கருத்துப் பதிந்திருக்கிறார். இதன் மீது, கார்த்தி சிதம்பரம் புதுவை காவல்துறைத் தலைவரிடம் மின்னஞ்சல் புகார் அளித்ததனடிப்படையில், இரவியை புதுவை காவல்துறையினர் கைது செய்தனர். உடனடியாக, அவருக்கு பிணை கிடைத்தது என்பது ஒரு ஆறுதல்.

பாடகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் சின்மயி புகார் மீது, இராசன், சரவணக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது, சமூக ஊடகத்திலும், கருத்துரிமை, சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி அக்கறையுள்ளோரிடையேயும், ஒரு விவாதப்புயலைக் கிளப்பியுள்ளது.

அரசியல் அரங்கமாயினும், சமூகத்தின் எந்தப் பொதுவெளியாயினும், அங்கெல்லாம் பெண்கள் தலையிடும் போது, அவர்கள் மீது பாலியல் வகைப்பட்ட தாக்குதல்களும் துன்புறுத்தல்களும் நிகழ்வது இன்னும் பொதுப் போக்காக நீடிக்கிறது. அந்தவகையில், சின்மயி தெரிவித்த பிற்போக்கான கருத்துகளுக்கு எதிரான விவாதத்தில், அவரை பெண் என்ற முறையிலோ, தனிப்பட்ட முறையிலோ, அவர் குடும்பத்தாரை இழிவு படுத்தியோ, எழுதுவதை நாம் ஏற்கவில்லை. யாரும் ஏற்க முடியாது.

அவ்வாறு, சின்மயி குறித்து இராசனோ, அல்லது வேறு யாருமோ கருத்துக் கூறியிருந்தாலும், அது கண்டிக்கத்தக்கது.

ஆனால், இதன் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கைகளும், இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கொடுமையான தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளும் தாம், இங்கு கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.

எந்தவொருவரும் தாங்கள் தனிப்பட்ட முறையில், ஊடகங்கள் வாயிலாக, பொது நிகழ்ச்சிகளின் மூலமாக தாக்கப்படுவதாகவோ, அவதூறு செய்யப்படுவதாகவோ கருதினால் அதன் மீது தக்க ஆதாரங்களோடு, அவதூறுத் தடுப்பு வழக்கு தொடுக்கலாம். இதைக் கூட, முதலமைச்சர் செயலலிதா சகட்டுமேனிக்கு அனைவர் மீதும் உள்நோக்கத்தோடு, அதுவும் அரசு செலவில் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம்.

ஆயினும், தனிப்பட்ட நபர்கள் குறிப்பாக அரசு அதிகாரத்தில் இல்லாதவர்கள், குற்றவியல் சட்டப்படி அவதூறு வழக்குத் தொடுத்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும், குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த அடிப்படையில், கார்த்தி சிதம்பரமோ, சின்மயியோ வழக்குத் தொடுத்து அதன் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், அதுபற்றி அதிகம் நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால், தகவல் தொழில்நுட்ப சட்டம், அது போன்ற கொடும் சட்டப்பிரிவுகள் ஆகியவை மேற்சொன்ன வழக்குகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது, கருத்துரிமை மீது அக்கறையுள்ள அனைவரும் கவனம் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

தமிழத்திலும், புதுவையிலும், இச்சட்டத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் பொதுத் தளத்தில் மக்கள் பிரச்சினைகள் மீது விவாதங்கள் எழுப்பி கருத்துப் பரப்பலில் ஈடுபட்ட செயல்பாட்டாளர்கள் ஆவர். இங்கு மட்டுமின்றி, இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் காவல்துறையின் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் சமூகச் செயல்பாட்டாளர்களே ஆவர்.

எடுத்துக்காட்டாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்ணியமான முறையில் திறனாய்வு செய்து வெளியான ஒரு கேலிச் சித்திரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து பரப்பினார் என்பதற்காக, கடந்த 2011 ஏப்ரலில் மேற்கு வங்க ஜாதவ்பூர் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ரா கைது செய்யப்பட்டது பலருக்கும் நினைவிருக்கும்.

ஊழல் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி, கேலி சித்திரம் வரைந்து இணையங்களில் பரப்பியதற்காக ஓவியர் அசீம் திரிவேதி 2012 செப்டம்பரில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படியும், அரசுக்கு எதிராகப் போர் புரிவதாக குற்றம்சாட்டியும் கைது செய்யப்பட்டு பெரும் போராட்டத்திற்குப் பிறகு, அவர் மீதான குற்றப்பதிவுகள் குறைக்கப்பட்டதை நாடறியும்.

ஏடுகளும், தொலைக்காட்சிகளும் பெரும்பாலும் பெருமுதலாளிகளாலும், அரசியல் புள்ளிகளாலும் நடத்தப் படுகின்றன. இவை முதலாளிய நிறுவனங்களின் விளம்பரங்களைச் சார்ந்தே பெரிதும் இயங்குகின்றன. முதன்மை ஊடகவியலாளர்கள் பலர் அரசியல் தரகர்களாகவும், ஒட்டுண்ணி அரசியல் வலைப்பின்னலில் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இக்காரணங்களால் ஏடுகளும், தொலைக்காட்சிகளும் மக்கள் சார்ந்த கருத்து விவாதத்திற்கு வரம்புக்குட்பட்டே பயன்படுகின்றன.

இந்நிலையில், மக்கள் நலம் சார்ந்த கருத்துப் பரப்பலுக்கு, உற்றவழியாக ட்விட்டர், முகநூல், வலைப்பதிவகள் போன்ற சமூக ஊடகங்களே திகழ்கின்றன. தமிழகத்திலும், முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மூன்றுத் தமிழர் சாவுத் தண்டனை போன்ற சிக்கல்களில் தமிழ்ச் சமூகத்தின் இளையோரை, திரட்டுவதற்கு சமூக ஊடகங்கள் ஆற்றி வருகிற பணி முகாமையானது.

இச்சிக்கல்களும், இவை குறித்த விவாதங்களும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை மைய இழையோட்டமாகவே கொண்டு இயங்குகின்றன. எனவே, இப்பிரச்சினையில் தமிழ்த்தேசியர்களும், தமிழின உணர்வாளர்கள் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமானது.

புதுவை இரவி, சின்மயி பிரச்சினையில் தமிழகத்தின் இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008இன் பிரிவு 66-A பாய்ந்துள்ளது. இப்பிரிவின்படி, பிறர் மீது அருவருப்பான, அச்சுறுத்தக்கூடிய, தொந்தரவு தரக் கூடிய, ஆபத்து விளைவிக்கக் கூடிய, இழிவுபடுத்தக்கூடிய, மனதை காயப்படுத்தக்கூடிய, பகைமையைப் பரப்பக் கூடிய, வெறுப்பைப் பரப்பக்கூடிய, தகவல்களை மின்னணுக் கருவிகள் மூலமாக பரப்புவது தண்டனைக்குரியக் குற்றம் ஆகும்.

இதனை கூர்ந்து கவனித்தால், எந்தத் திறனாய்வையும் குற்றச் செயலாக கொண்டு வந்துவிட முடியும் என்பது தெளிவாகும்.

சோனியாவின் மருமகன் இராபர்ட் வதேரா அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக் குவித்ததைவிட, நிதியமைச்சர் மகன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பதவியைப் பயன்படுத்தியும், தான் அனைத்திந்தியக் காங்கிரசுக்குழு உறுப்பினர் என்ற பதவியைப் பயன்படுத்தியும், சொத்துக் குவித்திருக்கிறார் என்று சமூக ஊடகத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்வதே அருவருப்பானது, மனதைக் காயப்படுத்தக்கூடியது, தொந்தரவுத் தரக்கூடியது என குற்றம்சாட்டப்படுகிறது. சின்மயி பிரச்சினையிலும், மம்தா பானர்ஜி பிரச்சினையிலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்குற்றங்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் தண்டம் ஆகிய தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தண்டத்தொகை எவ்வளவு என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்.

கார்த்தி சிதம்பரத்தின் மீதோ அல்லது பிறர் மீதோ இதே போன்ற ஊழல் குற்றச்சாட்டை ஏடுகளுக்கு நேர்காணலில் கூறினாலோ, கட்டுரை வாயிலாக எழுதினாலோ, பொது மேடைகளில் பேசினாலோ அவற்றுக்கு எளிதில் தண்டனை பெற்றுத் தந்துவிட முடியாது. உண்மையில், நாள் தவறாமல் எல்லாப் பொது ஊடகங்களிலும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டுதான் வருகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் உலகப் பத்திரிக்கையாளர்கள் பலரையும் அழைத்து, தொலைக்காட்சிகளின் கேமராக்களுக்கு முன்னால் புதுவை இரவி போல் பேசினால் அவர் மீது இச்சட்டம் பாய முடியாது.

சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை என்ற அரச உண்மையைத்தான் இது காட்டுகிறது.

சமூக ஊடகங்களில், காரசாரமாக விவாதம் நடத்தினாலே யாராவது ஒருவர் மற்றவர் மீது இதே வகைக் குற்றச்சாட்டை கூற முடியும். சின்மயி பிரச்சினையில், இவ்வாறு தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இராசனும், சரவணக்குமாரும் கூறுவதை பெண்ணுரிமை என்ற பெயரால் எளிதில் புறக்கணித்துவிட முடியாது.

சின்மயி மீனவர்கள் சிங்களப்படையால் இனப்படுகொலை செய்யப்படுவதை மீனைக் கொல்வதோடு ஒப்பிட்டுள்ளதை, யாரும் அருவருப்பான, அச்சுறுத்தக்கூடிய, பகைமையைப் பரப்பக்கூடிய செயல் என்றோ, இனக்கொலையைத் தூண்டினார் என்றோ குற்றம்சாட்டி காவல்துறையை அணுகவில்லை. ‘So called தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருத்தப் பதிந்த போது, சின்மயியின் பார்ப்பனத் திமரைக் கண்டு கொந்தளித்தார்கள். ஆனால், இராசனும், சரவணக்குமாரும் பிறரும், இதை சமூகத்தில் நடக்கும் விவாதத்தின் ஒரு பகுதியாகவே எதிர் கொண்டனர்.

எப்போதும் ஆதிக்கக் கருத்தில் உள்ளவர்களுக்கும், விடுதலைக் கருத்தை முன்வைப்போருக்கும் இந்த அணுகுமுறை வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, கடவுள் மறுப்பாளர்கள் வரலாற்றில் எந்தக் காலத்திலும், பொதுவாக வழிபாட்டு இடங்களை அழித்ததில்லை. கருத்தைக் கருத்துத் தளத்தில் தான் அவர்கள் எதிர் கொண்டார்கள். ஆனால், ஒரு மதத்தைச் சார்ந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் தான், இன்னொரு மத வழிபாட்டிடத்தை அழித்திருக்கிறார்கள். இப்போதும், அது தான் தொடர்கிறது.

கருத்துக் களஞ்சியங்களான நூலகங்களை எரிப்பது, ஓலைச்சுவடிகளை அழிப்பது ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் ஆதிக்கவாதிகளே ஆவர்.

இப்போதும், காவல்துறை உதவியோடு கருத்தியல் செயல்பாட்டாளர்களை தாக்குபவர்கள் ஆதிக்கவாதிகள் அல்லது ஆதிக்கக் கருத்தியல்களுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பதை பார்க்கிறோம். இது தற்செயலானதல்ல. கருத்துக் களத்தில், தாங்கள் வலுவிழக்கும்போது, ஆதிக்கக் கருத்தியலாளர்கள் அடக்குமுறையையே துணைக்கு அழைக்கிறார்கள். இதற்கு ஏற்பவே, சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008இன், பிரிவு 66-F, இந்த உண்மையை இன்னும் தெளிவாக்கும். ஏற்கெனவே இருந்த, 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 2008இல்  இப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன என்பது கவனங்கொள்ளத்தக்கது.

இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு, பாதுகாப்புக்கு, இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்பினால் மூன்றாண்டு சிறை, அத்துடன் ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் என இப்பிரிவு கூறுகிறது.

இது போதாதென்று, 2011ஆம் ஆண்டு இச்சட்டத்தில் மேலும் சில கொடும்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இத்திருத்தச் சட்டத்தின் 3(2)(b), 3(2)(g) பிரிவுகளின்படி, இனவாதத் தன்மையுடைய, பல்வேறு மொழியினங்களுக்கிடையில் பகைமையைத் தூண்டக் கூடிய அல்லது அச்சுறுத்தக் கூடிய அல்லது தீமைப் பயக்கக்கூடிய, அல்லது சட்ட விரோதத் தன்மையுடைய அல்லது வேறு வகையில் எதிர்க்கப்பட வேண்டிய தகவல் பரிமாற்றங்கள் தண்டனைக்குரியக் குற்றங்களாகும்.

இந்தியாவின் நட்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக கருத்துப் பரப்புவதும் தண்டனைக்குரியக் குற்றமாக இச்சட்டம் கூறுகிறது.

இதன்படி பார்த்தால், தமிழின உணர்வாளர்கள் அன்றாடம் பகிர்ந்து கொள்கிற இணையத் தகவல்கள் அனைத்துமே தண்டனைக்குரியக் குற்றங்களாகிவிடும். மார்வாடி ஆதிக்கத்தை எதிர்த்தோ, மலையாளிகளின் அடாவடியை எதிர்த்தோ, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தோ கருத்துப் பகிர்வதே இனங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்துவதாக, சமூகங்களுக்கிடையில் பதட்டத்தை ஏற்படுத்துவதாக வகைப்படுத்திவிட முடியும். தண்டனைக்குரியக் குற்றங்களாக பதிவு செய்து விட முடியும்.

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து கருத்துகளைப் பதிவு செய்தால் அதுவும் நட்பு நாட்டிற்கெதிரான குற்றச்செயலாக ஆக்கப்பட்டுவிட முடியும். கூடங்குளம் அணுஉலையை மூடு என்பது சமூகத்திற்கு தீமை பயக்கக்கூடிய கருத்துப் பரப்பல் என வகைப்படுத்தி 66-Fஇன் கீழ் வழக்குத் தொடுக்க முடியும்.

ஒட்டு மொத்தத்தில், தமிழின உணர்வாளர்களின் கருத்துப் பதிவுகள் அனைத்துமே குற்றச் செயலாக ஆக்கப்பட முடியும்.

எனவே தான், தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிராகவும், காவல்துறை அச்சட்டத்தை பயன்படுத்தி உணர்வாளர்களை துன்புறுத்துவதற்கு எதிராகவும் திரளுவதில் தமிழின உணர்வாளர்கள் முதன்மைப் பங்காற்ற வேண்டியது மிக அவசியமாகிறது.

உண்மையில், இச்சட்டப்பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1), 19(2) ஆகியவற்றுக்கு எதிரானவை ஆகும். கருத்துரிமைகளைப் பறிப்பவை ஆகும்.

புதுவை இரவி, தமிழகத்தில் இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது இச்சட்டத்தின் கொடும்பிரிவுகளின் கீழும், பிற சட்டங்களின் கடும்பிரிவுகளின் கீழும் காவல்துறை வழக்குத் தொடுத்திருப்பது சமூக ஊடகத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்யும், தமிழின உணர்வு செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதே ஆகும். இதன் விளைவுகளை இப்போதே சந்தித்து வருகிறோம்.

காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சி, பலரும் சமூக ஊடகத்தின் விவாதக் களங்களிலிந்து ஒதுங்கி வருகிறார்கள். இது ஆபத்தானது. இது தொடர அனுமதிக்கக் கூடாது. சின்மயி ஒரு பெண் என்பதை வைத்து, இந்தக் கடுமையான காவல்துறை அச்சுறுத்தலை கவனிக்கத் தவறக் கூடாது. சின்மயியை மட்டுமல்ல வேறு எவரையும் கூட தனிப்பட்ட முறையில் தாக்குவதை விவாதத்தில் பங்குபெறுபவர்கள் கண்டிக்காமல் விடக்கூடாது. ஆனால், அதற்காக மையமான பிரச்சினையிலிருந்து திசைத்திரும்பிவிடவும் கூடாது.

இங்கு மையமான சிக்கல் சமூக ஊடகத்தளத்தில் அரசும், காவல்துறையும் தொடுத்துள்ள தாக்குதலே ஆகும். தமிழின உணர்வாளர்களும் கருத்துரிமையில் அக்கறையுள்ளோரும் இரவி, இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது காவல்துறையில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டிக்க வேண்டும்.

சின்மயி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் புகாரின் மீது விரைந்து செயல்பட்ட காவல்துறை, இது போன்ற வேறு புகார்களின் மீது எவ்வளவு மெத்தனமாக நடந்து கொண்டது என்பதை அனைவரும் அறிவார்கள். இக்கொடிய சட்டத்தை உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்கள் தங்களுக்குச் சாதகமாக எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு இந்நிகழ்வுகள் தெளிவான சான்றுகளாகும்.

எனவே, இரவி, இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டித்தும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கொடும்பிரிவுகளை எதிர்த்தும் கருத்துரிமையில் அக்கறையுள்ள அனைவரும் கைக்கோக்க வேண்டிய அவசர, அவசியம் எழுந்துள்ளது.

இப்பிரச்சினை குறித்து, சமூக ஊடகங்களிலும் பிற ஊடகங்களிலும் வலுவான விவாதங்களை எழுப்புவதோடு மட்டுமின்றி, நேரடி இயக்கங்களிலும் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. காவல்துறையின் இவ்வழக்குகளை எதிர்த்தும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கொடும் பிரிவுகளை எதிர்த்தும், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்ற மென்மையான நேரடி நடவடிக்கைகளிலாவது ஈடுபட தமிழின உணர்வாளர்களும், கருத்துரிமையில் கவனங் கொண்டவர்களும் அணிதிரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இதுகுறித்து, ஒத்தக் கருத்துள்ளவர்கள் கலந்துரையாடி முடிவெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது என் விருப்பம்.

 (செய்தி : த.தே.பொ.க.செய்திப்ம் பிரிவு)
 

Sample text

Sample Text