slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

ஞாயிறு, 9 டிசம்பர், 2007

புதுவைப் பட்டறை ஒரு மைல்கல்


 https://web.archive.org/web/20191228030632/http://vinaiooki.blogspot.com/2007/12/blog-post_09.html

தமிழை , கணினியில் தமிழின் பயன்பாட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல தமிழார்வலர்கள் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஆரோக்கியமான சூழலில், புதுவை வலைப்பதிவர் சிறகம் நடத்திய தமிழ்க் கணினி வலைப்பதிவர் பட்டறை ஒரு மைல்கல் என்று சொல்லலாம். நகரத்தின் மையப்பகுதியில் , வெளியூர்காரர்களும் சிரமமில்லாமல் சென்றடைந்திடக்கூடிய இடமாக பட்டறை நடக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தமைக்காக அமைப்புகுழுவினரை நிச்சயம் பாராட்டலாம். 



நந்தா, மா.சிவக்குமாருடன் சரியாக காலை 9 மணிக்கு அரங்கை (சற்குரு உணவகம்) அடைந்தபோது ஓசை செல்லா, எ-கலப்பை முகுந்த் ஆகியோர் ஏற்கனவே அங்கு இருந்தனர். புதுவை நண்பர் ஜே.பூரா எங்களுக்கான காலை உணவு ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டார்.
காலை உணவை முடித்துவிட்டு பட்டறை நடக்கும் ஐந்தாம் தளத்தை அடைந்த போது ஏற்கனவே பட்டறை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தவர்கள் நிறைந்திருந்தனர். பங்கேற்பாளர்கள் உள்ளே நுழையும்பொழுதே பட்டறைக்கான மலர், தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு , எழுதுகோல், எழுத நோட்டுப்புத்தகம் அதை அழகாக வைத்துக் கொள்ள ஒரு கோப்பையும் அவர்களுக்கு தரப்பட்டது.


வழக்கமான ஆரம்ப விழாபோல் அல்லாமல் , இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோர் ரத்தினச்சுருக்கமாக பட்டறையின் நோக்கத்தைப் பற்றி சொல்லிவிட்டு நேரிடையாக நிகழ்ச்சிக்குச் சென்றனர்.

எ-கலப்பை முகுந்த் தமிழில் தட்டச்சு செய்யும் வழிமுறைகளை எளிமையாக புரியும்படி வகுப்பு எடுத்து முடித்தவுடன் , முனைவர். மு.இளங்கோவன் தமிழ்99 முறையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பங்கேற்பாளர்கள் சற்று இறுக்கமாக அமர்ந்திருப்பதைக் கவனித்த மா.சிவக்குமார் மு.இளங்கோவனுடன் இணைந்து சில மேலதிக தகவல்களை சுவரசியமாகக் கூறி அந்த இறுக்கத்தை சற்று தளர்த்தினார்.





பங்கேற்பாளர்களும் இறுக்கம் தளர்ந்து சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க நந்தா, முகுந்த் ஆகியோர் மா.சி உடன் இணைந்து அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். பட்டறை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஓசை செல்லா புகைப்படங்களை எடுத்து , தனக்கே உரிய ஒன்லைனருடன் தமிழ்வெளி தளத்தில் நேரலையாக தரவு செய்து கொண்டிருந்தார்.



அருணபாரதி தமிழில் மின்னஞ்சல் , அரட்டை வசதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி வகுப்பெடுத்து முடித்ததும், “உபுண்டு" ராமதாஸ் சுவரசியமாக உபுண்டு இயங்கு தளத்தைப் பற்றியும் கட்டற்ற மென்பொருள்களின் அவசியத்தைப் பற்றியும் ஆதிக்க அடிமை மோகம் எந்த அளவுக்கு போகும் என அழுத்தம் திருத்தமாக உதாரணங்களுடன் விளக்கினார்.

ராமதாசு பேசிக்கொண்டிருக்கையிலேயே , மா.சிவக்குமார் இடைமறித்து , ராமதாசு லினக்ஸு குழுமங்களில் தமிழில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் உறுதியான நிலையைப் பாராட்டினார்.



ராமதாசின் விளக்கம் முடிந்த பின்னர், முனைவர்.மு.இளங்கோவன் தமிழில் இணையத்தில் கிடைக்கப் பெறும் இணையத்தளங்களைப் பற்றிய தனதுக் கட்டுரையைப் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். தமிழில் இணையம் என்று பெயர்வந்தமையைப் பகிர்ந்து கொண்டார்.






அருமையான மதிய உணவிற்குப் பின்னர், முனைவர் நா.இளங்கோவின் தமிழ் வலைப்பதிவுகள் ஆரம்பிப்பது, குறித்த அமர்வு ஆரம்பித்தது. சாமானிய மக்களுக்கு தொழில்நுட்ப விசயங்களைச் சொல்லித்தருவது பெரிய கலை. அதை மிக அனயாசமாக செய்தார். அவ்ர் ஒவ்வொன்றாய் விளக்க மடிக்கணினியில் இருந்து விளக்கங்களை விரைவாக திரையில் காட்டிய அருண்பாரதியின் ஒருங்கிணைவு பாராட்டத்தக்கது. திரட்டிகளில் இணைப்பது பற்றி தூரிகா வெங்கடேசும் , வேர்டுபிரஸ் பற்றி நந்தாவும் ஒலி ஒளிக்காட்சிகளை இணைப்பது பற்றி செல்லாவும் வகுப்பு எடுத்தனர். சென்னைப் பட்டறையில் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டியவர்கள் மாணவர்கள் என்றால் இங்கு அரசு அலுவலங்களில் பணிபுரியும் நடுத்தர வயதினர் காட்டிய ஆர்வம் மெச்சத்தகுந்தது. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க வைத்தார்கள். கடை நாற்பதுகளில் இருந்த ஒரு பெண்மனி தமிழில் டைப் அடிச்சுக் காட்டுங்கோ என்று சொல்லி அவர்களுக்கு தட்டச்சு செய்து எவ்வளவு எளிமையானது என்று சொல்ல அவர்கள் முகம் அடைந்த பூரிப்பு அளவிட முடியாதது.






ஜிமெயில் ஒரு கட்டத்தில் தன் வேலையைக் காட்டியதால் சிலருக்கு ஜிமெயில் கணக்கு திறந்து தர இயலவில்லை. இருப்பினும் கோவிந்து என்ற புதுவை நண்பர் விடாப்பிடியாக தனது கையேட்டில் கணக்குத்திறக்கும் வழிமுறைகளை எழுதிக் கொண்டார். மா.சிவக்குமாரும் களத்தில் இறங்கி சொல்லிக் கொடுத்தது பேருதவியாக இருந்தது.





பிரபல வலைப்பதிவாளர் பொட்டீக்கடை சத்யாவை இந்த நிகழ்வின் போது சந்தித்தது மகிழ்ச்சியான விசயம்.




பட்டறையை வெற்றிகரமாக முடிந்ததும், தன் வீட்டுக் கல்யாணத்தை சிறப்பாக முடித்து ஏற்படும் சந்தோசத்தை அமைப்பாளர்களின் கண்களில் காண முடிந்தது. பட்டறையின் தொடர்ச்சியாக புதுவைக்குட்பட்ட பள்ளிகளில் தமிழில் கணினிப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் புதுவை வலைப்பதிவர் சிறகம் ஈடுபடப் போவதாக தூரிகா வெங்கடேஷ் தெரிவித்தார். இவர் திரட்டி.காம் என ஒரு வலைப்பூத் திரட்டி ஒன்றை வடிவமைத்துள்ள செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.



இந்த புதுச்சேரி பட்டறை, பிறநகரங்களில் இருக்கும் தமிழார்வலர்கள் இணைந்து தமிழ்க்கணினிப் பயன்பாட்டை பாமரமக்களிடம் கொண்டு சேர்க்க, இவ்வகைப் பட்டறைகளை நடத்தப் போவதற்கு ஒரு முன்மாதிரி என்றால் அது மிகையாகாது. புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்

தமிழ்க் கணினி பயன்பாட்டைப் பரவலாக்கும் முயற்சிகளில் மீண்டும் ஒரு முறை பங்கேற்ற மகிழ்ச்சியில் ஊர் திரும்பினோம்.






புகைப்படங்கள் நன்றி: ஓசை செல்லா, தமிழ்வெளி.காம்

கருத்துகள் இல்லை: