Ads 468x60px

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, June 17, 2008

புதுச்சேரி வலைப்பதிவர் கருத்தரங்க புகைப்படங்கள்

திரு. இரா.சுகுமாரன் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர்
பேசியதிலிருந்து சில..........

தமிழ் வளர்ந்து வருகிறது, தமிழ் உலக அரங்கில் தவிர்க்க இயலாமல் தனது இடத்தை தக்க வைக்க போராடிவருகிறது. அதற்கு உதாரணமாக இரண்டை குறிப்பிடலாம். ஒன்று உலகில் எத்தனையோ மொழிகள் இருக்க தமிழில் இணைய முகவரியை கொடுப்பதற்கான சோதனை மொழிகளுள் பதினைந்தில் (11+4 )ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. (http://உதாரணம்.பரிட்சை/) என்ற சொல்லைக் கொண்டு இணைய முகவரியை தமிழில் கொடுத்து இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுநாள் வரை ஆங்கிலத்திலேயே இணைய முகவரிகளை கொடுத்தோம். இனி அது மாறும் நிலை உருவாகியுள்ளது. இது இணையத்தில் தமிழின் வளர்ச்சியை குறிக்கிறது.

இரண்டாவதாக, நாசா விண்வெளி நிலையம் வேற்று கிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா? என சோதிக்கும் முயற்சியில் 15 மொழிகளை பல்வேறு குறீயீடாக மாற்றி சோதித்து வேற்று கிரகத்தில் சூரிய குடும்பத்தில் உள்ள பூமி போல ஏதேனும் வேறு எங்கேனும் மனிதர்கள் அல்லது மனிதர்கள் போல முன்னேறிய உயிர்கள் இருக்கிறதா என சோதித்து வருகிறார்கள். அதில் தமிழ் மொழியையும் ஒரு குறியீட்டு மொழியாக பயன்படுத்துவதாக நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார், இதுவெல்லாம் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை மறுக்க முடியாது.
இன்று மின்னஞ்சல் ஜீமெயில் தமிழில் வந்துள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்டிருந்தாலும் இதில் பல சொற்களை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தினர் மொழி பெயர்த்துள்ளனர். இதனால் ஆங்கிலமே தெரியாதவர்கள் கூட தமிழில் மின்னஞ்சல் அனுப்ப இயலும் என்ற நிலை இன்று உள்ளது.

நண்பர் வெங்கடேசு கூட வேறு ஒரு பிரபலமான நிறுவனத்தின் இணைய தளத்தை முழுவதுமாக மொழி பெயர்த்ததாக என்னிடம் தெரிவித்தார்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் திரு கோ.சுகுமாரன் அவர்களது தொடக்கவுரையிலிருந்து ....

இணையத்தில் தமிழின் வளர்ச்சியை பறைசாற்று ம் வலைப்பூக்கள் தான் வேகமாக ஊடகமாக செயல்படுகின்றன. நாகைப்பட்டினத்தில் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக திரட்டப்பட்ட உயிர் காக்கும் உணவுப் பொருட்களை படகுகளில் சென்று கொடுக்கும் போராட்டம் நடத்திய போது அதனை நேரடியாக நொடிக்கு நொடி இணையதளத்தில் பதிவிட்டோம். இது போன்ற வேகமான மக்கள் ஊடகத்தை நாம் இன்னும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.

திரு க.அருணபாரதி அவர்கள் பேசியதிலிருந்து.....

இணையத்தில் மட்டும் தமிழ் வளர்ந்தால் போதாது. கணினியில் நிறுவப்படும் மென்பொருட்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. அவற்றை தமிழாக்கம் செய்திடவும், புதிய தமிழ் மென்பொருட்களை உருவாக்கவும் இளைஞர்கள் முன்வர வேண்டும். அதனை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் செயல்திட்டம் வகுத்து செயல்படுத்தும் என நம்புகிறேன். தமிழ் மென்பொருட்கள் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் வராமல் அவை மக்கள் சார்ந்த இயக்கங்கள், அமைப்புகளின் கீழ் மக்களுக்கான பயன்பாட்டிற்கு வர வேண்டும்.

சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் மகரந்தன் அவர்கள் வாழ்த்துரையில் பேசியதிலிருந்து....

புலம் பெயர்ந்த தமிழர்களின் வலைப்பூக்களில் மொழியின் நடை சிறப்பாக உள்ளது. வலைப்பூக்கள் தமிழர்களை இணைப்பதோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியிலும் பங்கு வகிக்கின்றன. அதோடு அல்லாமல் வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகமாக வளர்ந்து வந்துள்ளது. இந்த வலைப்பதிவுகள் எதிர்காலத்தில் பத்திரிகைகளுக்கு ஒரு சவாலாக அமைந்து விடும் நிலை வளர்ந்து வருகிறது. இப்போதே வலைப்பூக்கள் பத்திரிகைகளுக்கு முன்பாக செய்தியை அளித்து வருகின்றன. இதன் போக்கு காலப்போக்கில் வலைஉலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.

விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு தமிழநம்பி அவர்கள் வாழ்த்துரையில் பேசியதிலிருந்து....
கடந்த மாதம் திணமணியில் ஒரு கட்டுரையில் தனித்தமிழை பற்றி அவதூறாக ஒருவர் எழுதியிருந்தார். அதனை மறுத்து தினமணிக்கு கடிதம் எழுதியும் அதனை அவர்கள் பிரசுரிக்கவில்லை.. அதே கட்டுரை திண்ணை இணைய இதழில் வெளிவந்தபோது அதற்கு நான் எழுதிய மறுப்பு அடுத்த நாளே வந்தது. விவாதங்களும் அதன் விளைவாக நடந்தன. இது போன்ற எளிதில் ஒரு கருத்திற்கு எதிர்வினையாற்றும் செயல்திறனை வலைப்பூக்கள் கொண்டிருக்கின்றன என்றார். வலைப்பூக்கள் சிலவற்றில் வெளிவரும் வேண்டத்தகாத கருத்துக்களை நீக்க தமிழ்மணம் குழுவினர் முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் நா.இளங்கோ வாழ்த்துரையில் பேசியதிலிருந்து....

வலைப்பூக்களில் நல்ல கருத்துக்கள் வெளிவருகின்ற போது தேவைப்படாத சில கருத்துக்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கும். இது தவிர்க்க முடியாதது. தமிழில் கெட்ட வார்த்தைகள் என சொல்வதே ஒரு ஆதிக்க மனப்பான்மை தான். ஆகவே வலைப்பூக்களில் தணிக்கை செய்வது முடியாத காரியமாகத்தான உள்ளது என்று யதார்த்த நிலையை எடுத்துரைத்தார். இணையதளங்களில் தமிழில் தேடுவதற்கு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழ்மணம் திரட்டியின் நிறுவனர் திரு காசி ஆறுமுகம் பேசியதிலிருந்து...

தான் பேசத் தொடங்கும் போதே நான் மேடைகளில் அதிகம் பேசியதில்லை எனவே, நான் பேசுவதில் குறை இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தனது உரையை தொடங்கினார். சொல்லியதிலிருந்து பார்த்தால் சரியாக பேசமாட்டாரோ என எண்ணும்படியாக இருந்தது.

ஆனால் மிகமிக நிதானமாக பல்வேறு கருத்துக்களை மிக அருமையாக முன்னெடுத்து வைத்திருந்தார். தமிழின் நிலை, புதிய யுனிகோடு வருவதில் உள்ள சிக்கல்கள் பற்றியெல்லாம் மிக மிகத் தெளிவாக கருத்துக்களை முன்வைத்தார்.

திரட்டிகள் பற்றியும் அது செய்யும் அதன் உண்மையான வேலையாக பத்திரிகைச் செய்திதாள்களுக்கு எப்படி அதன் விளம்பர தட்டி உள்ளதோ அது போலத்தான் எனவே அதனிடம் அதற்கு மேல் எதிர்பார்க்க கூடாது என தனது கருத்தை முன்வைத்திருந்தார். வலைப்பதிவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் தமிழ்மணம் பற்றியும் தொழில் நுட்பரீதியான கேள்விகள் சிலவற்றுக்கும் பதில் அளித்தார்.

தமிழ்மணம் திரட்டியை தொழில்நுட்ப ரீதியாக நிர்வகித்து வரும் திரு தமிழ் சசி அவர்கள் பேசியதிலிருந்து...
வலைப்பூக்களை தமிழ் மணத்தில் பதிப்பிக்கும் பொது அவற்றில் உள்ள கருத்துக்கள் முழுவதையும் நாம் படிப்பதில்லை. அவ்வாறு படித்து அவற்றை ஆய்வு செய்து தணிக்கை செய்து தான் வெளியிட வேண்டும் என்றால் அது கடினமான காரியம். ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் பலரும் எழுதுவதால் எங்களால் நாடுகளின் நேரங்களை பொறுத்துதான் அதனை செயல்படுத்த முடியும். அது கடினமான பணி. பிறர் மனதை புண்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டிருக்கும் பதிவுகளை எவரேனும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினால் அதனை செய்வோம். அதற்கென தனியே தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்திலேயே ஒரு பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்தார். வலைப்பூக்கள் நல்ல கருத்துக்களோடு நட்பையும் சேர்த்து வளர்க்கிறது. இதனை நாம் நல்ல முறையில் உபயோகித்துக் கொண்டு தமிழர்களின் ஒற்றுமையை வளர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டியன் அவர்கள் பேசியதிலிருந்து...
தற்பொழுதுள்ள ஊடகங்கள் ஆதிக்க சக்திகளிடம் மேட்டுக்குடித் தன்மையடனும் தான் செயல்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். பெரும் ஊடகங்கள் இவ்வாறு இருப்பதால் மக்களின் உண்மையான கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுதில்லை. இந்நிலையை வலைப்பூக்கள் உடைத்திருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். புதிய இளம் எழுத்தாளர்கள் பலரையும் வலைப்பூவுலகம் இன்று தமிழுக்கு வழங்கியிருக்கிறது. இக்கருத்தரங்கு மூலம் பல புதிய நண்பர்களையும் இதே வலைப்பூவுலகம் தான் நமக்கு வழங்கியிருக்கிறது. நாம் தெளிவான பாதையில் ஊடகங்களின் அரசியலில் சிக்குண்டு சிதையாமல் நமது ஊடகமாக வலைப்பூக்களை மாற்ற வேண்டும். வலைப்பூக்களில் ஒரு பிரச்சனை குறித்து என்ன விவாதிக்கிறார்கள் என்பதை பலரும் ஆராய்ந்திடும் காலம் வர வேண்டும். இதன் மூலம் நாம் புதிய வரலாற்றை சமூகத்தை படைக்க வேண்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

3 comments:

Kasi Arumugam said...

சிறப்பான ஏற்பாடுகளுக்காகவும், இந்தத் தொகுப்புக்காகவும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்கும், குறிப்பாக இரு சுகுமாரன்களுக்கும் :-) பாராட்டும் நன்றியும்

இரா.சுகுமாரன் said...

தங்களின் புதுச்சேரி வருகைக்கும், தங்களின் பாராட்டுதலுக்கும் நன்றி.

தங்களுடைய பாராட்டுதலை நாங்கள் எல்லோரும் பிரித்துக் கொள்வோம்.

ஏனெனில் எங்களில் எல்லோரும் இந்த வகை செயல்களில் ஆர்வமும் அக்கரையும் உடையவர்கள் தான்.

நன்றி

Anonymous said...

இணையத்தில் தமிழ் வளர்க்க அயராது
உழைக்கின்ற உங்கள் அனைவர்க்கும்
இதய பூர்வமான பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி.
தமிழ்ச்சித்தன்

 

Sample text

Sample Text