slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

திங்கள், 12 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தினமணி" செய்தி

இன்றைய(12.11.07) தினமணி இதழில் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி விரிவாக  செய்தி வெளிவந்துள்ளது.

பார்க்க : புதுச்சேரி - 12 2007 00:11

கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் வலைப்பதிவுகள்

புதுச்சேரி, நவ. 11: கணினியில் வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கணினியைத் தமிழில் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகளில் எழுதுவதற்கான வசதிகளை பிளாக்கர்.காம், வேர்ட்பிரஸ்.காம் உள்ளிட்ட பல தளங்கள் இலவசமாக வழங்குகின்றன.

யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரில் இலவசமாக வலைப்பதிவுகளை ஆரம்பித்து தங்கள் கருத்துகளை எழுத முடியும். தங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இதில் விவாதிக்க முடியும். கதை, கவிதை, கட்டுரை, திரைவிமர்சனம் என எழுதலாம்.

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள தமிழ்த் திரட்டிகள் உள்ளன. இவைகள் இலவசமாக வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கின்றன.

இதற்காகத் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழூற்று உள்ளிட்ட திரட்டிகள் செயல்படுகின்றன. எழுதுபவர்கள் இந்தத் திரட்டிகளில் தங்கள் வலைப்பதிவுகளை இணைத்துக் கொண்டால் ஒரே இடத்தில் உலகில் உள்ள அனைவரும் படிக்க முடியும்.

தமிழ்மணம் திரட்டியில் 2354 பேர் தங்கள் பதிவுகளை இதுவரை இணைத்துள்ளனர். இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 143 பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதேபோல் தேன்கூட்டில் 1874 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளனர். இந்திய மொழிகளில் தமிழில்தான் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த வசதி வாய்ப்புகள் இருப்பதால் கணினியில் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இயங்குதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பலருக்குத் தேவை.

புதுச்சேரியில் இந்த வலைப்பதிவுகள் குறித்தும், கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைக் கொண்டு செல்வது, இது தொடர்பான இயங்குதளங்களையும், தமிழ் மென்பொருள்களையும் அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பதிவுகளில் தமிழைப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல உள்ளது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன்.

இதற்காக இவர்கள் டிசம்பர் 9-ம் தேதி ஒருநாள் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளனர். இதில் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார்.


இந்த அமைப்பைத் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணினி நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களில் தமிழின் பங்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற பயிற்சி பட்டறைகள் இதற்கு வலு சேர்க்கும்.

1 கருத்து:

ச.பிரேம்குமார் சொன்னது…

அருமை அருமை! பட்டறை பற்றிய செய்திகள் நாளிதழ்கள் மூலம் அனைவருக்கும் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி :)