கருத்தரங்கிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு இரா.சுகுமாரன் தலைமை தாங்கி பேசினார். வலைப்பதிவுகள் பற்றியும் இணையத்தில் தமிழின் பயன்பாடு பற்றியும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். 'திரட்டி' வலைப்பதிவுகளைத் திரட்டும் இணையதளத்தை நடத்திவரும் தூரிகா வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கில் சிறப்புரையாற்ற அமெரிக்காவிலிருந்து "தமிழ்மணம்" திரட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முனைவர் சொ.சங்கரபாண்டி, தமிழ்மணத்தை தொழில்நுட்ப ரீதியாக நிர்வகித்து வரம் திரு தமிழ் சசி ஆகியோரும், கோவையிலிருந்து தமிழ்மணத்தின் நிறுவனர் திரு காசி ஆறுமுகம் அவர்களும் வந்திருந்தனர்.
புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளரும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைக்குழு உறுப்பினருமான திரு கோ.சுகுமாரன் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது பேச்சில் பல நாடுகளிலிருந்தும் செய்திகளை எளிதிலும் வேகமாகவும் பெற வலைப்பூக்களே சிறந்த ஊடகமாக செயல்படுகின்றன எனக் கூறினார்.
சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் மகரந்தன் அவர்கள் கருத்தரங்கை வாழ்த்திப் பேசினார். அவர் பேசுகையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழிநடை சிறப்பாக உள்ளதாகவும் வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாகவும் செயல்படுகின்றன எனக் கூறிப்பிட்டார். பின்னர், விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு தமிழநம்பி அவர்கள் பேசுகையில் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் வலைப்பூக்கள் உதவுவதாக குறிப்பிட்டு பேசினார்.
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் திரு நா.இளங்கோ பேசுகையில் தமிழில் தேடுவதற்கு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். கருத்தரங்கிற்கு முன்னிலை வகித்த திரு க.அருணபாரதி இணையத்தில் தமிழ் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது என்றும் தமிழ் மென்பொருட்களின் வளர்ச்சியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறி்ப்பிட்டார்.
பின்னர் பேசிய திரு இரா.சுகுமாரன் கடந்த 2007 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நடத்திய தமிழ்கணினி - வலைப்பதிவர் பயிற்சி பட்டறையின் போது வெளியிடப்பட்ட குறுந்தகட்டில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக க.அருணபாரதி உருவாக்கிய சில மென்பொருட்கள் வெளியிடப்பட்டன எனவும் அவை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இணையதளத்தில் விரைவில் யாரும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.
(குறிப்பு: ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள மென் பொருட்கள் முழுமையாக இணைக்கப்படாததால் பணியாற்ற வில்லை. குறுந்தகடில் வெளியிடப்பட்டுள்ளது பணியாற்றும் நிலையில் உள்ளது, விரைவில் பணியாற்றும் நிலையிலான முழு மென்பொருட்கள் இணைக்கப்படும் மேலும் டாட் நெட் தரவிறக்கம் செய்து உபயோகிக்க வேண்டும் என்ற குறிப்பும் தளத்தில் இல்லை. எனவே விரைவில் முழுவிரங்களுடன் வெளியிடப்படும். தற்போது உள்ளதை இரண்டொரு நாட்களுக்கு யாரும் தரவிறக்கம் செய்ய வேண்டாம். - இரா. சுகுமாரன்)
கருத்தரங்கின் தொடக்கமாக "தமிழ்மணம்" திரட்டியின் நிறுவனர் திரு காசி ஆறுமுகம் திரட்டிகளின் வேலையை பற்றிக் குறிப்பிட்டு பேசினார். நாளிதழ்களின் போஸ்டர் செய்யும் வேலையைத் தான் திரட்டிகள் செய்கின்றன என எளிமையாக திரட்டிகளின் பணியை பற்றி அவர் சொன்னார். தமிழ் இணைய உலகில் இணையதளங்களின் வளர்ச்சியை விட 95 % விழுக்காடு தமிழ் வலைப்பூக்களால் தான் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். வணிக முக்கியத்துவம் இல்லாதிருப்பதும், அரசியல் ஆதிக்கத்திற்கு உட்படாமல் நம் படைப்புகளை நாமே வெளியிடுவதும் தான் வலைப்பூக்களின் சிறப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் திரு தமிழ் சசி அவர்கள் உரையாற்றினார். தமிழ் மணம் திரட்டியின் தொழில்நுட்பரீதியான சவால்களை பற்றியும் வலைப்பூக்கள் எவ்வாறு உலகத் தமிழர்களின் ஒற்றுமையை பேணுகின்றன என்பது குறித்தும் அவா உரையாற்றினார். நமக்கான வாசகர்களை நாமே உருவாக்கும் வசதியை இவை செய்து தருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக உரையாற்றிய முனைவர் திரு சொ.சங்கரபாண்டி அவர்கள் தற்பொழுதிருக்கும் ஊடகங்கள் மக்களின் கருத்துக்களை புறக்கணிக்கின்றன என்றும் அதனை உடைத்து வலைப்பூக்களை நமக்கான ஊடகமாக மாற்றி புதிய வரலாறு படைக்க வேண்டும் என்றும் பேசினார். இறுதியாக திரு ம.இளங்கோ நன்றி நவின்றார். வல்லுனர்களின் கருத்து மழை நிறைவடைந்ததும் வானத்திலிருந்து நிஜ மழை தொடங்கியது. மழைச்சாரலோடு கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
தோழமையுடன்,
க.அருணபாரதி
5 கருத்துகள்:
விரிவான தகவல்களுக்கு நன்றி!
லக்கிலுக் வணக்கம்,
தங்களின் கருத்துக்கு எனது நன்றி
தொடரும் புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்
கருத்தரங்கில் கலந்து கொண்டபின் மனநிறைவோடு திரும்பினோம். நெரிங்கிய உறவினரைக்கண்டு வந்த நிறைவு! நன்றி!
although i missed the event
had a great satisfaction of reading the nice write-up
a complete coverage indeed !
catch u people soon,
bye
srini
கருத்துரையிடுக