தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது
புதுவை தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம்
புதுச்சேரி, பிப்.1- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்க்க்கூடாது என்றும், 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் நேற்று முன்நாள் நடைபெற்ற தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழோசை, 01-02-2011 |
மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.
உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.
- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது என்பதோடு, 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும்
- எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது
- தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
- இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன், அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக