இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

புதன், 19 மே, 2010

எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டுகோள்!

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், 19-05-2010 புதன் காலை 11.00 மணியளவில் புதுச்சேரி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்தி:                 

கோவையில் நடைபெற உள்ள உலகத் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 7.10.2010 அன்று வெளியான மாலை செய்தித்தாள் ஒன்றில் தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதாகவும், அதற்கென தனிக் குழு ஒன்று அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மொழியின்பால் பற்றுக் கொண்ட அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. 

தமிழில் 18-ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலில் வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அதன் பின்னர் தந்தை பெரியார் அவர்கள் 1935-இல் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவர் தமிழில் உள்ள 11 எழுத்துக்களை மாற்றி அமைத்தார். அவர் புதியதாக எழுத்துக்களை உருவாக்காமல் ஏற்கனவே இருந்த தமிழ் எழுத்துக்களை வைத்து சில மாற்றங்களை செய்தார். மொத்த தமிழ் எழுத்துக்களில் அவர் செய்த சீர்திருத்தம் வெறும் 4 விழுக்காடுதான்.  

தற்போது கொண்டு வரப்படும் இந்த எழுத்து மாற்றம் முன்னாள் துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமி அவர்களால் முன்மொழியப்பட்டது. அதாவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துக்கள் 72–க்கும் மாற்றாக புதிய குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டுமென கூறுகிறார்.இதன்படி மாற்றம் செய்தால் அது தமிழில் 80 விழுக்காடு சொற்களும் 59 சதவிகித எழுத்துக்களும் மாறும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இது ஒட்டு மொத்த தமிழ் மொழியையே மாற்றுவதாகும்.

 இவ்வாறு தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையத்தில் உள்ள அரிய தலவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்துள்ளது. குறைந்த படிப்பறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்கள் ஆவார்கள். இந்த எழுத்து மாற்றம் வந்தால் கணினியில் எளிதில் பயன்படுத்தக் கூடிய மொழியாக தமிழ் மாறும் எனக் கூறுவதையும் கணினி வல்லுநர்கள் ஆதரத்துடன் மறுக்கின்றனர்.  

தமிழக அரசின் இந்த எழுத்து மாற்ற அறிவிப்புக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் ஒரு அங்கமாக புதுச்சேரியில் கடந்த 16-ஆம் நாளன்று ஒரு நாள் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடத்தினோம். இதில் தமிழக அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்ற பல்துறை தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர், கணினி வல்லுநர்கள் உரையாற்றினர். இம்மாநாட்டில், தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து கடந்த 17-ஆம் நாளன்று, உலகத் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம. ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் உலக அளவில் தமிழ் ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். 

மேலும், தமிழக அரசு எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என கொள்கை முடிவெடுத்து அதனை முதல்வரோ அல்லது தொடர்புடைய துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

இரா. சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர், கோ. சுகுமாரன், அமைப்புக் குழு உறுப்பினர், பேராசிரியர் நா. இளங்கோ, அமைப்புக் குழு உறுப்பினர்,
ம. இளங்கோ, அமைப்புக் குழு உறுப்பினர், தமிழநம்பி, ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு.

கருத்துகள் இல்லை: