slide

Slide 1
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
Slide 2
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் - தமிழ்மணம்
Slide 4
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
Slide 6
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
Slide 7
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள்


                                    ஊடகச் செய்தி                                 30.01.2011

     புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் இன்று (30-01-2011) காலை 10.30 முதல் 1.30 வரை வணிக அவை அரங்கில் ‘தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.
 

பேராசிரியர் நா.இளங்கோ
இம்மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.
 
பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள்                
இராம.கி அவர்கள்
உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
 

இரா.சுகுமாரன்
கோ.சுகுமாரன் அவர்கள்
     
தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
மா.பூங்குன்றன் அவர்கள்
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் 
  1.   தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது. 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.   
  2.  எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது என ஒருங்கு குறி நிறுவனத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  3.  தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
  4. இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
            
                  இரா. சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

புதுச்சேரி தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு: நிகழ்ச்சி நிரல்

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு
எதிர்ப்பு மாநாடு
நாள் : 30.01.2011 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 9.00 முதல் 1.00 மணி வரை
இடம் : வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி.
தலைமை
திரு. இரா. சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
முன்னிலை
திரு. கோ.அ.செகநாதன் அவர்கள்,
தலைவர் உள்ளாட்சி மன்றங்களின் கூட்டமைப்பு
திரு. ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
திரு. ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டி,- தமிழ் வலைப்பதிவு திரட்டி
 
வரவேற்பு
திரு. க.அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,
கைப்பேசியில் மின் நூல்வெளியிட்டு
மாநாட்டுத் தொடக்க உரை
பேராசிரியர் திரு. ந.தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர் (ஓய்வு), தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்

மின் நூல் முதல் படி பெறுபவர்
திரு. கோ. சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு,
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT)
கருத்துரை
பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா அவர்கள்
புதுச்சேரி இயற்கைக் கழகம்
திரு. இராம.கி. அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் , (INFITT) சென்னை
பேராசிரியர் திரு. நா. இளங்கோ அவர்கள்,
தமிழ் துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி
திரு. மா. பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழி , சென்னை
திரு. கோ. திருநாவுக்கரசு அவர்கள்,
தாளாண்மை உழவர் இயக்கம்
திரு. இரா. அழகிரி அவர்கள்,
தமிழர் தேசிய இயக்கம், புதுச்சேரி
திரு. ந.மு.தமிழ்மணி, அவர்கள்,
அமைப்பாளர், செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
திரு. க. தமிழ் மல்லன் அவர்கள்,
தலைவர், தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி
திரு. தமிழ நம்பி அவர்கள்,
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
திரு. சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர், தனித்தமிழ் கழகம், புதுச்சேரி
திரு. பெ. பராங்குசம் அவர்கள்,
 தலைவர், இலக்கியப் பொழில் இலக்கியப் பாசறை, புதுச்சேரி.
திரு. தமிழ்நெஞ்சன் அவர்கள்,
புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம் புதுச்சேரி
திரு.ப. திருநாவுக்கரசு அவர்கள்,
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி
மாநாட்டு நிறைவுரை
திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்துப் பாதுகப்பியக்கம்
நன்றியுரை:
திரு. ம. இளங்கோ, அவர்கள்
அமைப்புக்குழு உறுப்பினர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20, 4வது தெரு விரிவாக்கம், அன்னை தெரேசா நகர்,
மூலக்குளம், புதுச்சேரி - 605 010.
செல்: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, வலைப்பூ: www.puduvaibloggers.blogspot.com, 
இணையம்: www.pudhuvaitamilbloggers.org 
.............
அண்மைக்காலமாக இணையம், கணினி ஆகியவற்றின் பயன்பாட்டின் காரணமாக தமிழ் மொழியும் வளர்ந்துள்ளது என்று கருதலாம். இன்று உலகம் முழுதும் எளிமையாக தமிழில் தகவல் தொடர்புகள் செய்ய முடிகிறது. இந்த வளர்ச்சிக்கு ஒருங்குகுறி நடைமுறைக்கு வந்ததே காரணமாகும்.

ஒருங்குகுறி (Unicode) என்றால் என்ன?
ஒருங்குகுறி என்பது வரியுருக்களையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக் கப்பட்ட ஒரு குறிமுறை நியமம்.கணிப்பொறியில் ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளைத் தவிர பிற மொழி எழுத்துக்களை எழுதுவதிலும் படிப்பதிலும் சிக்கல் நிறைந்து இருந்தது. எனவே, உலகில் உள்ள எல்லா மக்களும் கணினியில் எளிதில் பயன்படுத்த, உலகின் எல்லா எழுத்துமுறை களையும் உள்ளடக்கி ஒரு எழுத்துத் தரப்பாடு உருவாக்கப் பட்டது. அதற்குப் பெயர் தான் ஒருங்குறி எழுத்து முறையாகும்.

கணினி, அலைபேசி, கணினி இயங்குதளம் ஆகிய வற்றில் தமிழைப் பயன்படுத்த இந்த முறை மிகவும் அவசியம். இந்த முறையில் தமிழ் எழுத்துக்கள் கையாளப்படுவதால், தமிழ் மொழி கணினியில் தங்கு தடையின்றி செயல்பட முடியும். ஒருங்குகுறியில் தமிழ் கையாளப்படுவதால் இணையதளங்கள் தனியே எழுத்துருக் களை வைத்திருக்கத் தேவையில்லை.
முன்பெல்லாம் ஒவ்வொரு மென்பொருள் நிறுவனமும் புதுப்புது எழுத்துருக்களை உருவாக்கிச் சந்தையில் விற்பனைக்குத் தந்தன. ஒரு நிறுவன எழுத்தை நாம் படிக்க வேண்டும் என்றால் நம் கணினியிலும் அந்த எழுத்துரு இருக்க வேண்டும். அப்போதுதான் பிறர் அனுப்பும் கடிதங்களை, கோப்புகளைப் படிக்க முடியும், நாம் இன்று தமிழ் ஒருங்குகுறி எழுத்துருவைப் பயன்படுத்தி உலகின் எந்த மொழியினர் பயன்படுத்தும் கணினிக்கும் தமிழில் மடல்கள், கோப்புகளை அனுப்பினாலும் சிக்கலின்றி அனைவரும் படிக்க முடியும்.

கிரந்தம் என்பது என்ன?
கிரந்தம் ஒரு எழுத்து முறை, மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன. அற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடு உண்டாக்கவும் காரணமாகின.

ஒருங்குகுறி சேர்த்தியம் 

ஒருங்குகுறி சேர்த்தியம் என்பது உலகளவில் ஒருங்குகுறிகளை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பு எல்லா மொழிகளுக்கும் தகுந்த இடம் ஒதுக்கி அவற்றை பராமரித்து வருகிறது. இந்த அட்டவணையில் கூட்டல், கழித்தல், மாற்றம் வேண்டுமாயின் இந்த அமைப்பிடம் தான் முறையிட வேண்டும். இந்தியா இந்தக் குழுமத்தில் ஓட்டுரிமை பெற்ற உறுப்பினராக உள்ளது. முன்பு தமிழக அரசும் உறுப்பினராக இருந்தது.  இப்போது புதுப்பிக்காமல் விட்டு விட்டது.

ஒருங்குகுறியில் தமிழ்:
ஒருங்குகுறி சேர்த்தியம் ஒவ்வொரு மொழிக்குரிய எழுத்துகளுக்குத் தக்க இடங்களை ஒதுக்கி வைத்துள்ளது. தமிழ்மொழிக்கு 128 இடங்களை ஒருங்குகுறி சேர்த்தியம் அமைப்பு வழங்கியுள்ளது. சீன மொழிக்கு 5000க்கும் மேற்பட்ட இடங்களை ஒதுக்கியுள்ளது. தமிழின் 247 எழுத்துக்களையும் நாம் இந்த 128 இல் உள்ள 72  இடங்களிலேயே செயற்படுத்தி விட்டோம். தமிழ் எழுத்துக் களும், தமிழ் எண்கள், ஆண்டு, மாதம் சார்ந்த தமிழ்க் குறியீடுகளும், வழக்கில் உள்ள  கிரந்த எழுத்துக்களும் (ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ) இந்த 72 இல் இடம்பெற்றுள்ளன. தமிழுக்குரிய மற்ற 56 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

‘‘தமிழ் நீட்சி’’ முன்மொழிவு
காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த திரு. இரமண சர்மா என்பவர் இவ்வேளையில் ஒரு பரிந்தரை செய்துள்ளார். நிரப்பப்படாமல் உள்ள தமிழுக்குரிய 56 காலியிடங்களில் கிரந்த எழுத்துக்கள் 26ஐச் சேர்க்கும் முயற்சியே அப்பரிந்துரை. இதில் அவர் வடமொழி, செளராட்டிரம் போன்ற மொழிகளைத் தமிழ் எழுத்துக்களில் எழுத தேவநாகரி, தெலுங்கு முதலான மொழிகளைப் போலவே க1, க2 ,க3, க4 என  வல்லின எழுத்துக்களின் எழுத்த ‡ மூச்சு வேறுபாடுகளைக் குறிக்கவும், ‘‘வடமொழி உயிரொலிகளுக்கும் என்று மொத்தம் 26 புதிய கிரந்த எழுத்துக்களை நுழைக்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழ் அட்டவணை யில் தமிழுக்குரிய 56 நிரப்பப்படாத இடங்கள் என்பது நமது வருங்கார பயன்பாட்டிற்கேயயாழிய வேற்று மொழியின்/எழுத்தின் ஆக்கிரமிப்புக்கு அல்ல. 

 கிரந்தத்தைத் தமிழில் கலந்தால் ஏற்படும் விளைவுகள்
பழைய மணிப்பிரவாள நடைக்கு வித்திடலாம். தெலுங்கு, மலையாளம் போன்ற புது மொழிகளுக்கு வித்திடலாம்.
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீ இ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே
தொல்காப்பியர் வடவெழுத்துக்களை நீக்கி தமிழை எழுதிடச் சொல்லும் போது , நாம் தெரிந்தே வேற்று எழுத்துக் களை நம் மொழியில் கலக்க அனுமதிப்பது தற்கொலைக்கு நிகரானது.

நாக.கணேசனின் பரிந்தரை
இரமண சர்மாவின் பரிந்துரைக்கு மாற்றாக முன்மொழியப்பட்டிருக்கிறது.  என்னவென்றால் கிரந்த எழுத்துக்களுக்கு தனி அட்டவணைஅமைத்து, அதில் தமிழுக்கே உரிய சிறப்பு ஒலிகளை தரும் எழுத்துக்களை
(எ, ஒ, ழ, ற, ன, ஆகிய ஐந்தையும்) அதில் சேர்ப்பது.

மேலோட்டமாக பார்த்தால், தமிழ் எழுத்துக்களை தமிழ் மொழியைத் தாண்டி எடுத்துச் செல்லும் நாக. கணேசனின் முன்மொழிவு நன்மை பயப்பது போல் தோன்றும். அவர் எழுதுகிறார்.

‘‘இந்த ஐந்து எழுத்துக்களையும் சேர்ப்பதால், வருங்காலங்களில் தமிழர்கள் கிரந்தம் கலந்தே தமிழை எழுதுவார்கள் என்றும், மின்னஞ்சல்கள், இணையதளங் கள், வலைபூக்கள் ஆகியன கிரந்தம் கலந்தே எழுதப்படும் என்றும், இந்த ஐந்து எழுத்துக்களை சேர்க்காவிடில் தமிழ் மொழியை கிரந்தத்தைக் கொண்டு எழுத இயலாது’’ என்றும் கூறுவதை உணர முடிகிறது.

சுவாமிநாத தேசிகர் போன்றோர் தமிழ் மொழிக்கு ஐந்து எழுத்துக்கள் ( எ,ஒ,ழ,ற,ன) மட்டுமே உண்டு என்று பழித்தவர்கள், இன்று அந்த ஐந்து எழுத்தையும் கொண்டு கிரந்த அட்டவணையில் சேர்த்தால் வருங்காலச் சமூகம் தமிழ் மொழியை எழுத்தில்லா மொழி எனப் பழிக்கவும் கூடும். நமது கோரிக்கை, தமிழோடு கிரந்தத்தையும் கலக்க வேண்டாம், கிரந்தத்தோடு தமிழையும் கலக்க வேண்டாம்.

சிறீ இரமண சர்மாவின் முன்மொழிவு தற் போதைக்கு நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இருப்பினும் நாம் தொடர்ந்து அதனைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நாக. கணேசனின் முன்மொழிவினால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிற மொழிகளின் எழுத்துக்கள் தமிழில் கலந்தாலும், பிறமொழி  ஒலி தமிழில் கலந்தாலும், தமிழின் தனித் தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியான தமிழைப் பாதுகாப்பது  தமிழர்களின்  கடமையாகும்.

கைப்பேசியில் மின்னூல்
 கிரந்த திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் கைப்பேசியில் மென்னூல்கள்  வெளியிடப்பட உள்ளது. தற்போது திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசி ஆகியவை வெளியிடப்பட உள்ளன. அவை வெளியிடப்பட்டவுடன் www.pyw3.com என்ற தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருட்களை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக்குழு உறுப்பினரும், திரட்டி வலைப்பதிவு திரட்டியின் நிர்வாகியுமான ஏ.வெங்கடேசு இவற்றை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள :agevenkat@gmail.com

சனி, 22 ஜனவரி, 2011

புதுச்சேரியில் தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு
30-01-2011 ஞாயிறு
காலை 9.00 முதல் மாலை 1.00 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
................................................
பங்கேற்று கிரந்தக் கலப்பு எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பவர்கள்

பேராசிரியர் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர், (ஓய்வு) தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம்
திரு. இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை
.................
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்,
காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி
திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).
திரு. இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
திரு ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம்
திரு.ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டி, www.thiratti.com
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென் பொருள் வல்லுநர்,
திரு ம. இளங்கோ, அவர்கள்
அமைப்புக்குழு உறுப்பினர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
.....................
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழி, சென்னை.
திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
தாளாண்மை உழவர் இயக்கம்
திரு. இரா.அழகிரி அவர்கள்
தமிழர் தேசிய இயக்கம் புதுச்சேரி
திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி 
திரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,
திரு. தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,

திரு. தமிழ்நெஞ்சன்
 புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி,
திரு. பராங்குசம், புதுச்சேரி,
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி
தொடர்புக்கு:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர் 
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, இணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com,

சனி, 8 ஜனவரி, 2011

விழுப்புரத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை

விழுப்புரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடக்கவுள்ளது. 08-01-2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் காமதேனு அரிமா சங்கம் மற்றும் விதைகள் கருத்துக்களம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இதில் மாணவர்கள் திறமை வளர்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு பயன் படும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு தொடங்குதல், புதிய வலைப்பதிவு தொடங்குதல், வலையில் செய்தி பதிவு செய்தல், தமிழ் வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்தல், அதன்மூலம் அதிகப்படியானவர்களை நமது செய்தியை படித்திடச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளனர்.

இந்த பயிற்சியை புதுச்சேரி வலைப்பதிவர் சிறக்த்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், மற்றும் வலைப்பதிவு திரட்டி நிறுவனர் "திரட்டி" ஏ.வெங்கடேஷ் இருவரும் நடத்துகின்றனர்.

இந்த பயிற்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், மாணவர்கள் பயன்படும் வகையில் உரைகள் நிகழ்த்துதல் ஆகியவை நடைபெற உள்ளன.

வெள்ளி, 5 நவம்பர், 2010

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்


நேற்று (நவ.3, 2010) சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக்  கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம்,தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் பா.இறையரசன் தலைமைதாங்கிய இந்நிகழ்ச்சிக்கு அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரை யாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன்   தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாடினார்.  கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் திரு நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத்தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன்,  வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன்,  பொறி.அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப்  பலரும்  தீர்மானங்களை வழி மொழிந்தனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.      தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
2.       உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார்,  பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணைய தளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.       இப்பேராளர்களிடம்  ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில்  இடம் பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள்  இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.       தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
5.      அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி  இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.       இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில்  எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.
7.       அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.
8.       குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர்  ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.
9.       உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.
10.     சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.
11.     சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  இதேபோல் நல்ல தமிழில் வரும்  இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றிஅரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின் விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற் சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
12.     நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப்பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
13.     இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும் பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில்  இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல்  இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழாக மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.
தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம் பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே  இணையத்தளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.
தொடக்கவுரையில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார்.  அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய திரு இலக்குவனார் திருவள்ளுவன்  தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று  நடைபெற உள்ள ஒருங்குறிக் கூட்டத்தில்  கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு  இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்துநடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.
நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போக மாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.
பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்