இது குறித்து இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரா.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை:
தொன்மை, வரலாற்றுத் தொடர்ச்சி, இலக்கிய வளம், இலக்கணச் செல்வம் கொண்டது தமிழ்மொழி. ஆனாலும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இன்று வரை அறிவிக்கப்படாமல் உள்ளது. தற்போது கணினி காலத்தில் அரசு நிறுவனங்களும், மக்களும் தகவல் பரிமாற்றத்துக்கு கணினியையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தி மொழியை அடிப்படையாக வைத்து பிறமொழிகளை கணினியில் பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதாவது இந்தியைப் பிறமொழி பேசும் மக்கள் அனைவரும் கணினி வழியே கற்பதற்கான மென்பொருளை உருவாக்குதல், இந்தி மொழி பேசாத மக்கள் ஆங்கிலத்தில் அளிக்கும் தகவல்களை இந்தியில் மொழி பெயர்த்து தரும் கணினி வழி மொழிபெயர்ப்பு மென்பொருள்களை உருவாக்குதல், கணினியின் இந்தியைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.
மேற்கூறிய நோக்கங்களுக்கான மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு, தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் சமமாக பாவித்து இது போன்ற தொழில் நுட்பங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினித் தமிழ் ஆராய்ச்சிக்கு இந்தி மொழியை மையமாக வைத்து ஆய்வு செய்வதற்கு நிதி அளிக்கப்படுகிறது. தனியாக தமிழை ஆய்வு செய்ய நிதி அளிக்க வேண்டும்.
தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் தமிழ் வளர்ச்சித் திட்டத்துக்கென தனியாக ஓர் ஆணையம் அமைக்க வேண்டும். தமிழை எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் வலுப்படுத்தும் ஆணையமாக அது இருக்க வேண்டும்.
திட்டமிட்ட முறையில் தமிழ் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆணையத்தின் கீழ் கணினித் தமிழ் வளர்ச்சிப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும். கணினித் தமிழ் வளர்ச்சிக்கென அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மின்-ஆளுகை, மின் கல்வி, மின் வணிகம் போன்ற பல முனைகளில் தமிழ் செயல்பட வழி வகுக்க வேண்டும்.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் கணினிகள், அலைபேசிகள் போன்ற மின்னணுக் கருவிகள் தமிழைப் புழங்கும் கருவிகளாக இருக்க வேண்டும். தமிழைப் புழங்கும் கருவிகளுக்கு விற்பனை வரிச் சலுகையும், தமிழை புழங்காத கருவிகளுக்கு கூடுதல் விற்பனை வரியும் விதிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கணினித் தமிழ் வளர்ச்சி குறித்து விளக்க கூட்டம் புதுச்சேரி வணிக அவையில் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் சென்னையில் வரும் டிசம்பர் 16-ம் நடைபெறும் மாநாடு குறித்தும் விளக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்க உள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக