பிப்ரவரி 18,2013,00:00  IST
புதுச்சேரி
 வலைப்பதிவர் சிறகம், கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், கல்லூரி 
மாணவர்களுக்கான தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் முதலியார்பேட்டையில் 
இந்திய கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலை இலக்கியப் பெருமன்ற 
மாநிலச் செயலர் முருகையன் தலைமை தாங்கினார். வலைப்பதிவர் சிறகம் 
ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் நோக்கவுரையாற்றினார்.
சபாநாயகர் சபாபதி 
துவக்கிவைத்து பேசுகையில், " தமிழ் மொழியில் எண்ணின் எழுத்துருக்கள் கடந்த 
காலங்களில் வகுப்புகளில் சொல்லித் தரப்பட்டது. ரோமன் எழுத்துகள் புகுந்த 
பிறகு நமது எண்களின் எழுத்துருக்கள் முற்றிலும் மறைந்து விட்டன. தற்போது 
தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தமிழின் எண் 
எழுத்துருக்களை பயன்படுத்தினால் நடை முறையில் வாழும்' என்றார்.
அமைச்சர் தியாகராஜன் பேசும் போது "மாநிலத்தில் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கான பணிகளை அரசு முன்னெடுக்கும்' என்றார். 
இந்திய
 கம்யூ.,மாநில செயலர் விசுவநாதன், தேசியக் குழு உறுப்பினர் நாரா கலைநாதன், 
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் சுகுமாறன் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு
 அமர்வுகளில் தமிழில் இயங்குதளங்கள், தட்டச்சு மென்பொருள் நிறுவல், தமிழ் 
எழுத்துகளின் குறியீட்டு முறைகள், தமிழில் மின்னஞ்சல், வலைப்பதிவு 
தொடக்கம், தமிழில் மின் நூல், திரட்டி பயன்பாடுகள் குறித்து, கல்லூரி 
மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, காஞ்சி
 மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், மதகடிப்பட்டு காமராஜர் கலை அறிவியல் 
கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
 பங்கேற்ற மாணவர்களுக்கு பேராசிரியர் பசுபதி சான்றிதழ் வழங்கினார்.
காஞ்சி
 மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் இளங்கோ, பாரதியார் பல்கலைக் 
கூட உதவி  பேராசிரியர் ராஜராஜன், கலை இலக்கிய பெருமன்றம் எல்லை 
சிவக்குமார், துணைத் தலைவர் பொறியாளர் தேவராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


