slide

Slide 1
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
Slide 2
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் - தமிழ்மணம்
Slide 4
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
Slide 6
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
Slide 7
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி

சனி, 22 ஜனவரி, 2011

புதுச்சேரியில் தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு
30-01-2011 ஞாயிறு
காலை 9.00 முதல் மாலை 1.00 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
................................................
பங்கேற்று கிரந்தக் கலப்பு எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பவர்கள்

பேராசிரியர் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர், (ஓய்வு) தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம்
திரு. இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை
.................
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்,
காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி
திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).
திரு. இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
திரு ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம்
திரு.ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டி, www.thiratti.com
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென் பொருள் வல்லுநர்,
திரு ம. இளங்கோ, அவர்கள்
அமைப்புக்குழு உறுப்பினர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
.....................
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழி, சென்னை.
திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
தாளாண்மை உழவர் இயக்கம்
திரு. இரா.அழகிரி அவர்கள்
தமிழர் தேசிய இயக்கம் புதுச்சேரி
திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி 
திரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,
திரு. தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,

திரு. தமிழ்நெஞ்சன்
 புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி,
திரு. பராங்குசம், புதுச்சேரி,
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி
தொடர்புக்கு:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர் 
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, இணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com,

சனி, 8 ஜனவரி, 2011

விழுப்புரத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை

விழுப்புரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடக்கவுள்ளது. 08-01-2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் காமதேனு அரிமா சங்கம் மற்றும் விதைகள் கருத்துக்களம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இதில் மாணவர்கள் திறமை வளர்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு பயன் படும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு தொடங்குதல், புதிய வலைப்பதிவு தொடங்குதல், வலையில் செய்தி பதிவு செய்தல், தமிழ் வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்தல், அதன்மூலம் அதிகப்படியானவர்களை நமது செய்தியை படித்திடச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளனர்.

இந்த பயிற்சியை புதுச்சேரி வலைப்பதிவர் சிறக்த்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், மற்றும் வலைப்பதிவு திரட்டி நிறுவனர் "திரட்டி" ஏ.வெங்கடேஷ் இருவரும் நடத்துகின்றனர்.

இந்த பயிற்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், மாணவர்கள் பயன்படும் வகையில் உரைகள் நிகழ்த்துதல் ஆகியவை நடைபெற உள்ளன.

வெள்ளி, 5 நவம்பர், 2010

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்


நேற்று (நவ.3, 2010) சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக்  கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம்,தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் பா.இறையரசன் தலைமைதாங்கிய இந்நிகழ்ச்சிக்கு அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரை யாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன்   தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாடினார்.  கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் திரு நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத்தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன்வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன்பொறி.அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப்  பலரும்  தீர்மானங்களை வழி மொழிந்தனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.      தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
2.       உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார்பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணைய தளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.       இப்பேராளர்களிடம்  ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில்  இடம் பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள்  இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.       தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
5.      அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி  இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.       இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில்  எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.
7.       அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.
8.       குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர்  ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.
9.       உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.
10.     சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.
11.     சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  இதேபோல் நல்ல தமிழில் வரும்  இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றிஅரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின் விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற் சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
12.     நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப்பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
13.     இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும் பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில்  இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல்  இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழாக மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.
தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம் பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே  இணையத்தளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.
தொடக்கவுரையில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார்.  அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய திரு இலக்குவனார் திருவள்ளுவன்  தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று  நடைபெற உள்ள ஒருங்குறிக் கூட்டத்தில்  கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு  இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்துநடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.
நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போக மாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.
பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 16 ஜூலை, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எழுத்து மாற்றம்

  கோவை உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுப்-பொருண்மை களில் எழுத்து மாற்றம் தொடர்பான கலந்துரையரங்கம் இருந்தது. (பார்க்க படம்-1) இதில் ஏழாவது கலந்துரையாக எழுத்துச் சீர்திருத்தம் இருந்தது. 

இந்த கலந்துரையரங்கத்தில் தமிழ் எழுத்துக்களை சீர்திருத்துவது என்ற பெயரில் கட்டுரைகள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மலேசியா, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில்  நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் எழுத்துக்களை மாற்றுவது என்ற முடிவை மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. இதையொட்டி செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான திரு.இராசேந்திரன் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துக்கள் மாற்றுவது  http://puduvaibloggers.blogspot.com/2010/05/20-05-2010.html குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.

    அதே நேரத்தில் செம்மொழி மாநாட்டில் வீரமணி  எழுத்துமாற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். தமிழ் புத்தாண்டு மாற்றப்பட்ட போது  எதிர்ப்புகள் இருந்தது. அது பின்னர் ஆதரவாக மாறிப்போனது. அதேபோல எழுத்து மாற்றம் செய்யப்பட்டால் கொஞ்சம் எதிர்ப்பு இருக்கும் பின்னர் அடங்கிப் போகும். என தெரிவித்திருந்தார். அடுத்து முதல்வர் கருணாநிதியின் உரையின் முடிவில் கணினி உள்ளிட்ட பிரச்சனைகள் கணக்கில் எடுத்துக் கொண்டு  இறுதி நாளில் ஒரு பட்ஜெட் உரைபோல படிப்பேன் என்று கூறியது. தமிழ் எழுத்து மாற்றமும் உள்ளடக்கம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

    ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. அதோடு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மொழியியல் தலைப்பில் எழுத்து சீர்திருத்தம் தலைப்பிலான கட்டுரைகள் வாசிக்கப்பட்டது.

  அந்த கட்டுரையை வாசித்த நாக.இளங்கோவன், இலக்குவனார். திருவள்ளுவன், பேராசிரியர் செல்வக்குமார், மணியம் ஆகியோர் எழுத்து மாற்றம் செய்தால் தமிழ் சீர்கேடடையும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஐந்து பேரில் மற்றுமொருவர் வீரமாமுனிவர் எழுத்துமாற்றம் ஏதும் செய்யவில்லை. ஏ, ஓ ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டது வீரமாமுனிவர் காலத்துக்கு முந்தையது என கட்டுரை வாசித்தார்.

    பொதுவாக ஆய்வரங்கங்களில் ஆட்கள் குறைவாக இருந்த நிலையில் எழுத்து மாற்றம் தொடர்பான  அரங்கம் நிறைந்து வழிந்தது. பலர் இடம் இல்லாமல் திருப்பிச் சென்றனர். அதே நேரத்தில் அந்த அமர்வு முடியும் வரை அரங்கம் விருவிருப்பாகவே இருந்தது.

தமிழறிஞர் நாக. இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது என நடுவர் அறிவித்து முடித்துவிடும் படி தலைவர் கூறிய போது அரங்கத்தில் இருந்தவர்கள், தலைவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது எங்கள் உயிராதார பிரச்சனை, எனவே அவரை பேசவிடுங்கள் என்று தெரிவித்த போது அரங்கம் விருவிருப்படைந்தது. பார்வையாளர்களின் கோரிக்கையின் அடைப்படையிலும், எதிர்ப்பின் அடிப்படையிலும் தலைவர் வேறு வழியில்லாமல் கால நீட்டிப்பு அளித்தார். மேலும் நேரமாவதால் தலைவர் மீண்டும் எச்சரித்தார். பேராசிரியர் செல்வக்குமார் அடுத்து கட்டுரை வாசிக்க இருந்ததால் தனது நேரத்தை விட்டுகொடுத்து நாக. இளங்கோவனை வாசிக்கும் படி சொன்னார். இருப்பினும் அவரால் குறித்த நேரத்தில் கட்டுரையை முடிக்க இயலவில்லை.

    அடுத்து பேசிய பேராசிரியர் செல்வக்குமார் நாக. இளங்கோவனின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்று தான் என்று தன் பேச்சைத் தொடர்ந்தவர் தாம் என்ன சொல்லவருகிறார் எனபதை பதிவு செய்து எழுத்து மாற்றம் தமிழுக்கு கேடானது என வலுவான ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

முன்னதாக மணியம் அவர்கள் வேறு அமர்வுக்கு தலைமை வகித்தமையால் வர இயலாமல் போனதால் அவரது அனுமதியுடன் அவரது நண்பர் எழுத்து மாற்றம் தேவையற்றது என்ற கருத்தை எடுத்துரைத்தார்.
27-06-2010 அன்று பேராசிரியர் பெஞ்சமின்.லெ.பொ எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கது பொருத்தமா? என கேள்வி எழுப்பிய பேராசிரியர் எழுத்து மாற்றம் தேவையில்லை என்பதையே வலியுறுத்தினார்.

எழுத்து மாற்றம் செய்யாத அரசு எப்போதும் செய்யப் போவதில்லை என உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் இப்போதைய கோரிக்கையாகும்.

புதன், 2 ஜூன், 2010

எழுத்து மாற்றம்: தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறுவார்களாக! –விடுதலையில் வீரமணி அறிவுரை!!?

புதுச்சேரியில் நடைபெற்ற எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டை ஒட்டி விடுதலை நாளேடு கடந்த 20-05-2010 அன்று தலையங்கம் எழுதப்பட்டது. அந்த தலையங்கத்தில் தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறுவார்களாக! என அறிவுரை? வழங்கியுள்ளார்.
அந்த செய்தி விடுதலை இணையப்பக்கத்திலும் வெளிவந்துள்ளது.



விடுதலை தலையங்கச் செய்தி

எழுத்துச் சீர்திருத்தம்

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்று எதிர்ப்பு மாநாடு ஒன்று கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கு கொண்ட புலவர் ஆர். இளங்குமரனார் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தாவது:

தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தால், தமிழ் அறிந்தவர்கள் மீண்டும் புதிய தமிழைப் படிக்கவேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஏற்கனவே உள்ள பல்லாயிரக்-கணக்கான அரிய நூல்களும், இணைய தளத்தில் பல்துறை சேர்ந்த பக்கங்களும் உள்ள செய்திகளும் பயனற்றுப் போகும் என்றெல்லாம் அச்சுறுத்தி உள்ளனர்.

தமிழ் மொழியின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் இப்போது உள்ளதுபோலவே தொடக்கத்திலிருந்து வருகிறது என்று சொல்ல முடியுமா? ஓலைச்சுவடி, கல்வெட்டுகளில் எப்படி-யெல்லாம் எழுத்துகள் இடம் பெற்றிருந்தன, இடையில் எத்தகைய மாற்றங்களுக்கு ஆளாகின என்பதெல்லாம் நம் மதிப்பிற்குரிய புலவர்களுக்குத் தெரியாதா?

தந்தை பெரியார் புகுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டதால் என்ன சிரமம் ஏற்பட்டது? மேலும் எளிதாகப் படிக்கவும், கற்கவும் வசதி செய்து தரப்பட்டது. அது தவறா?

தமிழில் உள்ள 247 எழுத்துகளை எழுதுவதற்கு தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்தத்திற்குப் பிறகு 107 குறியீடுகள் தேவைப்-படுகின்றன. அவற்றுள் உயிர் மெய், இகர, ஈகார, வரிசைக்கு 36 குறியீடுகள், உயிர் மெய் உ-கர, ஊ-கார வரிசைக்கு 36 குறியீடுகள், ஆக 72 குறி-யீடுகள் தேவைப்படுகின்றன. மற்ற அனைத்-திற்கும் வேண்டியவை 35 குறியீடுகள்தான்.

இதனால் எழுத்துகளின் எண்ணிக்கை குறைகிறது. எவ்வளவுக்கெவ்வளவு எழுத்துக்கள் குறைகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு மொழியை எளிதில் கற்க முடியும். மேலை நாடுகளில் வாழும் தமிழ் வீட்டுப் பிள்ளைகள், தமிழே தெரியாமல் வளரும் நிலை இதனால் தடுக்கப்படும். உலகம் முழுவதும் தமிழ் மொழி பரவுவதால் அதிக வாய்ப்புக் கிட்டும்.

தெ.பொ.மீ. ,பேராசிரியர் கா.அப்பாதுரை, புலவர் குழந்தை, கி.வா.ஜ., பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் போன்றவர்கள் எல்லாம் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டார்களே!

உலகில் பல மொழிகளிலும் இந்த எழுத்துச் சீர்திருத்தம் நடைபெறுகிறது. ஜப்பானிய மொழி வலமிருந்து தொடங்கி செங்குத்து வரிசையில் எழுதப்படும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இடதுபுறத்தில் இருந்து எழுதத் தொடங்கிவிட்டனர். பண்டைய வரிவடிவமான நஞ்சியுடன் சுதாகான, ஹீரா கானா என்ற புதிய வடிவங்களையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

சீனாவில் 1956 இல் எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாடு முற்றிலுமாக பழைய வடிவங்களைப் புறக்கணித்து விட்டு ரோமன் வடிவத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

கேரளாவிலும் மலையாள மொழியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குஞ்சன் பிள்ளைக் குழுவின் பரிந்துரையை ஏற்று, மலையாள மொழியில் பயன்படுத்தப்பட்டு குறியீடுகளில் 75 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.

1935 இல் தந்தை பெரியார் தொடங்கிக் கொடுத்த எழுத்துச் சீர்திருத்தம் மேலும் வளர்ச்சித் திசை நோக்கிச் செல்வது, -அறிவியல் கண்ணோட்டத்தில் அவசியமேயாகும்.

எழுத்துச் சீர்திருத்தம் தமிழர்களிடையே பிரி-வினையை ஏற்படுத்திவிடும் என்கிற அளவுக்கு சில புலவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பது ஆச்சரியமானதே! அவர்கள் கூறும் கருத்துக்களில் விளக்கமும் இல்லை_ விவரமும் இல்லை.

18- ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் ஏகார, ஓகார வரிசைகளில் மாற்றம் செய்துள்ளார். 20 ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார். மாற்றம் என்பது ஒன்றுதான் மாறாதது. அதனை ஏற்றுக் கொள்ளத் தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறு-வார்களாக!

சனி, 22 மே, 2010

தமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு? - தமிழக அரசியல் இதழில் கட்டுரை!





தமிழ்மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு, 72-எழுத்துக்களில் மாற்றம் செய்யலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.”

தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்களையும், கணினி வல்லுனர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.
நடக்கவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக்குழு துணைத்தலைவருமான வா.செ. குழந்தைசாமி தலைமையில் ரகசியமாக நடந்துவருவதாக தமிழுணர்வாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
இந்நிலையில்தான், இந்த தமிழ் எழுத்து வடிவச் சீர்திருத்த்தை எதிர்த்து புதுவையில் “புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்” என்ற அமைப்பு, தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டை நடாத்தியிருக்கிறது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இரா. சுகுமாறனை சந்தித்துப் பேசினோம்.

“தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சியில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழச்தைசாமி தி.மு.க. அரசின் ஊதுகுழலாக செயற்படுகின்றார். அவா எழுதிய கட்டுரையின்படி உயிர்மெய் எழுத்துக்களில் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் மாற்றுக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கின்றார். அதன்படி எழுத்து மாற்றம் செய்தால் தமிழ்மொழி அறிவியல் மொழியாகவும், கணினியில் எளிதில் பயன்படக்கூடிய மொழியாகவும வளர்ச்சி பெறும் என கருத்தை முன்வைக்கின்றார். ஆனால் 72- எழுத்துக்களின் மாற்றம் தமிழில் 59-சதவிகிதம் மாற்றத்தை ஏற்படுத்து;ம் என ஆய்வாளர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர்.இது தமிழ்மொழியையே மாற்றிவிடும். இதனால் தமிழில் ஏற்கனவே உள்ள பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களும், இணையத்தில் உள்ள பல்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்களில் உள்ள செய்திகளும் பயனற்றுப்போகும். தமிழ் அறிந்தவர்கள் மறுபடியும் இந்த புதிய தமிழை படித்தாக லேண்டும். குறைந்த கல்வி அறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்களாக மாற நேரிடும். அதனால்தான் அந்த மாற்றத்தை கடுமையாக எதிர்க்கின்றோம்” என்றார்.

இது குறித்து மக்கள் உரிமை கூட்மைப்பின் செயலாளரும், உத்தமம் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினருமான கோ. சுகுமாறனை சந்தித்துப் பேசினோம்.

“உலக அளவில் பல்வேறு நாடுகளின் தமிழர்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த எழுத்து மாற்றம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டுத் தமிழர்களை உலகத் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்து;ம். இதனால் தமிழ்மொழியின் வளர்ச்சியோடு, தமிழர்களின் நிலையும் பின்னுக்குத் தள்ளப்படும். எழுத்து மாற்றத்தை வற்புறுத்துவோர் கூறும் காரணங்கள் ஏற்கும்ம்படியாக இல்லை. எழுத்து மாற்றத்தால் கணினிப் பொறியியல் உழைப்பு குறையும். குறைவாக செயற்பட முடியும் எனக் கூறப்படும் கருத்தை கணினி வல்லுநர்கள் சான்றுகளுடன் மறுத்துள்ளனர்.

எழுத்து மாற்றம் செய்ய வேண்டுமானால், பலதுறை ;சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து மிக நுணுக்கமாக ஆராய்ந்து படிப்படியாக மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டும். அதை விடுத்து அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததைப் போல் தமிழ் எழுத்து மாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் சீனாவில் கூட, அனைத்து அமைப்பினரையும் ஒன்று சேர்த்து குழு ஓன்;று அமைத்து பொதுவான எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தி அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.அப்படித்தான் இந்த அரசும் செய்யவேண்டும்” என்றார்.
இந்த மாநாடு குறித்து “தமிழ்வர்p வடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?” ஏன்ற நூலின் ஆசிரியரும் மூத்த தமிழ் அறிஞருமான திருச்சி இளங்குமாரனாரிடம் பேசினோம்.

“இந்திய மொழிகளில் மிக்க் குறைந்த எழுத்துக்கொண்ட மொழி தமிழ்தான். ஆதில் ஏன் மாற்றம் கொண்டுவர வேண்டும். தந்தை பெரியார் 11-எழுத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்தார். அதனால் எவ்வித இடையூறும் இருக்கவில்லை. இதற்காகப் பெரியார் மிகப் பெரிய தண்டனையை அனுபவித்தார். தமிழக அரசு அன்று அவரது புத்தகங்களை நூலகங்களில் வாங்க மறுத்தது. பின்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபிறகுதான் அந்த எழுத்துக்களின் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்மொழி அழகிய நோக்கிலும், தத்துவ நோக்கிலும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றது.

புள்ளிக்கூடத்தில், நீதிமன்றத்தில், ஆட்சி ஆணை மொழியாக, கோவில் மற்றும் இசை மேடைகளில் தமிழ் இருக்கவேண்டம். இதைத்தான் 69-ல் “எல்லா நிலைகளிலும் தமிழ்” என்று அண்ணா சொன்னார். ஆனால் அவரை முன்மாதிரியாகக் கொண்டு ஆட்சி செய்யும் கலைஞர் 35-ஆண்டுகள் ஆகியும், எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த-பாதுகாக்கபபட்ட ஓர் மொழியை முப்பது நாட்களில் தொலைக்கப ;பார்க்கின்றார் கலைஞர். இந்த சீர்திருத்தத்தின் மூலமாக மெல்லத் தமிழ் இனி சாகும். தமிழ் முற்றிலுமாக குழி தோணடிப் புதைக்கப்படும்” என்றார் வேதனையோடு.
இது குறித்து அமெரிக்கத் தமிழ்ச்சங்க அமைப்பாளரும், உலகத் தமிழ் அமைப்புக்களின் பொதுச்செயலாளரும், வட அமெரிக்காவில் தமிழ் மேலநிலைப் பள்ளி நடாத்தி வருபவருமான சொர்ணம் சங்கரபாண்டியிடம் பேசினோம்.

“தமிழ் எழுத்துக்கள் சிரமமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக தமிழக அரசு நிருபிக்கவில்லை. கற்பனையாகவே முடிவெடுத்து, தமிழ் எழுத்த வடிவத்தை எளிமைப் படுத்துகின்றோம் என முடிவெடுத்துள்ளது. இது நம் வீட்டிற்கு நாமே தீ வைப்பதற்கு சமம். தமிழர்களை திருமணம் செய்துகொண்ட வேற்ற மொழியினர்கூட தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றார்கள். இவர்கள் கூட தமிழ் எழுத சிரமம் என்று கூறியதில்லை;. ஜப்பான், சீன மொழிகள்pல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளன. இவற்றை எழுதும்போது அவர்களுக்கு சிக்கல் வந்ததில்லை. இணையதளத்தில் கூட தங்குதடையின்றி புழங்குகின்றனர். எழுத்து மாற்றம் என்பது தமிழ்வழி கற்கும் அப்பாவி மாணவர்களைப் பாதிக்கும். எனவே இதனை அனுமதிக்கக் கூடாது” என்றார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக்குழுத் துணைத்தலைவரும், எழுத்துச் சீரமைப்பில் முக்கிய பங்கு வகிப்பவருமான வா.செ.குழந்தைசாமியிடம் இந்த எதிர்ப்புக்கள் பற்றியெல்லாம் பேசினோம்.
“இது பெரியார் முன்வைத்த எழுத்து சீரமைப்பிற்கு அடுத்த கட்டம். தமிழ்மொழி கற்பது நேரம் அதிகமாக செலவிடப்படுவதாக அறியப்பட்டு., அதை எளிமைப்படுத்தவே இந்த எழுத்துச் சீரமைப்பு. மேலும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களின் அடுத்த தலைமுறைக்கு இனிமையாகவும், எளிமையாகவும் நேரத்தை சேமிக்கும் வகையிலும் ஏழுத்து மாற்றம் அமைக்கப்படடுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 247-தமழ் எழுத்துக்களுக்கு நாம் 107-குறியீடுகளை கற்கின்றோம். இப்போது உள்ள சீர்திருத்தத்தின்படி 39-குறியீடுகள் கற்றாலே போதும். எனவே இந்த எழுத்து சீர்திருத்தம் அரசிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

ஏற்கனவே தற்கால சந்ததியினருக்கு தமிழ் தகறாராக இருக்கம் நிலையில், இந்த எழுத்துச் சீர்திருத்தம் தேவையா என்பதை அரசு ஆயிரம் முறை சிந்திக்கவேண்டும்.
—நன்றி தமிழக அரசியல்
தட்டச்சு உதவி: புகலிட சிந்தனை மையம்

வெள்ளி, 21 மே, 2010

தமிழ் எழுத்து வடிவமாற்றம்! உலகத் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி - தமிழிஷ் 24 செய்தி

தமிழ் எழுத்து வடிவமாற்றம்! உலகத் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி



தமிழக அரசு சார்பில் வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்றம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த எழுத்து மாற்ற அறிவிப்பு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழக அரசு தன்னிச்சையாகவும், தமிழ் மொழியை சிதைக்கும் வகையிலும் தமிழ் எழுத்து மாற்றம் கொண்டு வருவதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்த சர்ச்சைக்குறிய பிரச்சனை ஊடகங்களில் வெளியானது, இது தொடர்பாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும்,​​ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன.​ இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை.​ அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்கு இதுவரை தமிழ முதல்வர்  எந்த வித விளக்கமும் அளிக்காதது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக உள்ளது.

எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல் - தினமலர்


தினமலர் முதல் பக்கம் » புதுச்சேரி செய்திகள்

எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல்
மே 21,2010,00:00 IST

புதுச்சேரி: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதில்லை என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலைப்பதிவர் சிறகம் கோரிக்கை விடுத் துள்ளது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் கூறியதாவது: கோவையில் நடக்க உள்ள உலக செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் ராஜேந்திரன் கூறியுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கொண்டு வரப்படும் எழுத்து மாற்றம் முன் னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமியால் முன்மொழியப்பட்டது. இதன்படி மாற் றம் செய்தால் தமிழில் 80 விழுக்காடு சொற்களும் 59 விழுக்காடு எழுத்துக்களும் மாறும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல் கள், இணையத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்து உள்ளது. தமிழக அரசின் இந்த எழுத்து மாற்ற அறிவிப்புக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அதனை முதல்வரோ அல்லது தொடர்புடைய அமைச்சரோ அறிவிப்பு செய்து சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அமைப்புக் குழு உறுப்பினர்கள் சுகுமாரன், பேராசிரியர் இளங்கோ உடனிருந்தனர்.